“கீழடி ஆய்வுக்கு சர்வதேச தரத்தில் அருங்காட்சியகம் தேவை” - எம்பி வெங்கடேசன்

“கீழடி ஆய்வுக்கு சர்வதேச தரத்தில் அருங்காட்சியகம் தேவை” - எம்பி வெங்கடேசன்

“கீழடி ஆய்வுக்கு சர்வதேச தரத்தில் அருங்காட்சியகம் தேவை” - எம்பி வெங்கடேசன்
Published on

கீழடியில் கண்டறியப்பட்டுள்ள பொருட்களை காட்சிப்படுத்த சர்வதேச தரத்திலான அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், “கீழடியில் 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்துடன் இணைந்து மேற்கொள்ள உள்ளதாக தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. கீழடியில் ரோமாபுரி நாணயம், பானை ஓடுகள், ஆப்கானிஸ்தானத்து பகுதி முத்துக்கள், கடல்புற பொருட்கள் உள்ளிட்டவை கிடைக்கப்பெற்றது, உலகம் முழுவதும் உள்ள வணிகர்களின் தொடர்பு மிக்க மிகப்பெரிய வணிகத்தளமாக கீழடி திகழ்ந்துள்ளதை குறிக்கிறது.

உலகப் புகழ்பெற்ற பல தொல்லியல் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களுடன் இணைந்து அங்கு ஆராய்ச்சி நடத்தினால் இன்னும் பல உண்மைகள்  வேகமாக உலகத்திற்கு தெரியவரும். 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சி இன்னும் விரிவுபடுத்தப்பட வேண்டும். அடுத்து 20 ஆண்டுகளுக்கு அகழ்வாராய்ச்சி செய்யும் அளவிற்கு மிகப்பெரிய பரந்த பகுதியாக உள்ள கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் உள்ளிட்ட பகுதிகளை சங்ககால வாழ்விடப் பகுதியாகவும், பாதுகாக்கப்பட்ட பகுதியாக மத்திய மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும்.

கங்கை சமவெளியில் மட்டும்தான் கிமு 600-ல் செழிப்பான நாகரிகம் இருந்ததாக வரலாற்று புத்தகத்தில் எழுதிவரும் நிலையில் வைகை நதியிலும் கிமு 600ல் செழிப்பான நாகரிகம் இருந்ததை இன்றைய ஆய்வுகள் நமக்கு எடுத்துரைக்கிறது. 4-ம் கட்ட அகழ்வாராய்ச்சியை விட  பல மடங்கு  வியப்புகள் 5-ம் கட்ட அகழாய்வில் இருக்கிறது.

5 ஆண்டுகளாக அகழாய்வு நடைபெற்று சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ள கீழடியை பற்றி மத்திய அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருப்பது தமிழர் நகரீகத்திற்கும், திராவிட நகரீகத்திற்கும் விளைவிக்கும் மிகப்பெரிய அநீதி. கீழடியில் இதுவரை ஒரு பெரும்பகுதியின் வால் பகுதி மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. இன்னும்  தலை, முகம் உள்ளிட்ட உடல் பகுதிகள் கண்டறியப்பட்டால் மிகப்பெரிய வரலாற்று ரீதியான புதிய பாய்ச்சலை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்தார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com