நீதிபதி தலைமையிலான விசாரணை உதவாது, சிபிஐ தேவை: மு.க.ஸ்டாலின்
முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் வீட்டில் போதிய மருத்துவ முன்னேற்பாடுகள் இல்லை என எழுந்துள்ள குற்றச்சாட்டு பற்றி சிபிஐ விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசிய போது, "ஓய்வு பெற்ற நீதிபதியோ அல்லது பதவியில் இருக்கிற நீதிபதி தலைமையிலோ விசாரணை ஆணையம் அமைத்தால், நிச்சயமாக அதில் மறைந்திருக்கக்கூடிய மர்மங்கள் வெளியே வர வாய்ப்பே கிடையாது. சிபிஐ விசாரணை வைத்தால்தான் உண்மைகள் வெளிவரும். தமிழ் நாட்டில் உள்ள அமைச்சர்களை மட்டுமல்ல, பல்வேறு மாநிலத்திலிருந்து வந்த அமைச்சர்களை மட்டுமல்ல, டெல்லியில் இருந்து வந்த அமைச்சர்களையும் விசாரிக்க வேண்டும்.
அதேபோல டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வந்த ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை பார்வையிட்ட மருத்துவர்களை விசாரிக்க வேண்டும். லண்டன் மருத்துவரை விசாரிக்க வேண்டும். தமிழகத்தின் ஆளுநரை விசாரிக்க வேண்டும். இவர்களையெல்லாம் விசாரித்து நாட்டு மக்களுக்கு உண்மை நிலையை கூற வேண்டுமானால் சிபிஐ விசாரணை நடக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன்" என்று கூறினார்.