“முகிலனை கண்டுபிடிக்க துரித நடவடிக்கை” - கனிமொழி கோரிக்கை
முகிலனை விரைவில் வெளிக்கொண்டுவர காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், மணல் கடத்தலுக்கு எதிரான போராட்டம் எனப் பல்வேறு போராட்டங்களின் முன்னணியில் இருந்து செயல்பட்டவர் சமூக ஆர்வலர் முகிலன். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான முகிலன் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சில ஆதாரங்களை வெளியிட்டார்.
செய்தியாளர் சந்திப்புக்குப் பின்னர், மதுரை செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையம் சென்ற முகிலனை காணவில்லை என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 8 நாட்கள் ஆன நிலையில் அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் தெரியவில்லை. முகிலன் மாயமானது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, தங்கள் தரப்பு தகவலை கூறிய எழும்பூர் ரயில்வே காவல்துறை, முகிலன் ரயிலில் பயணிக்கவில்லை என்று தெரிவித்தனர். டிஜிட்டல் உலகில் காணாமல் போன ஒருவரை 7 நாட்கள் ஆகியும் கண்டுபிடிக்க முடியவில்லையா என நெட்டிசன்கள் பலரும் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் முகிலனை விரைவில் வெளிக்கொண்டுவர காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ சூழலியலாளர் முகிலன் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் பேரணியில் நடந்த துப்பாக்கிச் சூடு 'திட்டமிட்ட அரசின் சதி' என்பதை வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்ட பின்னர், கடந்த ஒரு வாரமாக காணவில்லை. விரைவில் அவரை வெளிக்கொண்டுவர காவல்துறை துரித நடவடிக்கை எடுத்திட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.