பெட்டிக்கடை வைக்க ஆதார் கட்டாயம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னையில் சாலையோரம் பெட்டிக்கடை வைக்க ஆதார் எண் கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் சாலையோரங்களில் பெட்டிக்கடைகள் வைக்க அனுமதிகோரி வழங்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை விரைந்து பரிசீலிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜெய்சங்கர் உள்ளிட்ட 5 பேர் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெட்டிக்கடை வைக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்வதாக சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சாலையோரம் பெட்டிக்கடை வைக்க அனுமதிகோரி விண்ணப்பிக்க, ஆதார் எண் அவசியம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒருவர் பல இடங்களில் பெட்டிக்கடை திறப்பதை தடுக்கும் நடவடிக்கையாக சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், பள்ளி, கல்லூரி, மருத்துவமனைகள் அருகே பெட்டிக்கடை வைக்க அனுமதிக்க கூடாது என்றும் நீதிபதிகள் ஆணை பிறப்பித்துள்ளனர். அரசின் பல்வேறு துறைகளில் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது சென்னையில் பெட்டிக்கடைகளுக்கும் ஆதார் கட்டாயமாக்க உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.