குளங்களை தூர்வாரும் பணியில் ஈடுபட்ட நெடுவாசல் மக்கள்

குளங்களை தூர்வாரும் பணியில் ஈடுபட்ட நெடுவாசல் மக்கள்
குளங்களை தூர்வாரும் பணியில் ஈடுபட்ட நெடுவாசல் மக்கள்

கஜா புயல் பாதிப்பிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் நெடுவாசல் மக்கள், நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவிடக் கூடாது என்பதற்காக அங்குள்ள குளங்களை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைக்கோடியில் இருக்கும் பசுமையான கிராமம் நெடுவாசல். தங்களின் உழைப்பால் வறண்ட பூமியை வளமான விளைநிலமாக மாற்றினர் அக்கிராம மக்கள். இந்நிலையில்தான் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கப்போவதாக மத்திய அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி அறிவித்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அம்மக்கள் தொடர்ந்து 200 நாட்களுக்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்டதன் விளைவாக அத்திட்டத்தை அங்கு செயல்படுத்த மாட்டோம் என்று அரசு உத்தரவாதம் அளித்தது.

இனி நமக்கு பிரச்னை இல்லை என்று நெடுவாசல் மக்கள் விளைநிலத்தில் இறங்கி வேர்வை சிந்தி உழைத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தான், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலின் கோர தாண்டவம் அக்கிராமத்தை விட்டு வைக்கவில்லை. அக்கிராம மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விளங்கிய ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்தது. மேலும் அக்கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த மா, பலா, வாழை, தென்னை என அத்தனை மரங்களும் அழிந்து நாசமாயின.

இந்நிலையில்தான் மேலும் ஒரு அபாயமாக தங்கள் கிராமத்தில் நிலத்தடி நீர் மட்டமும் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது என்பதை ஊர்மக்கள் உணர்ந்தனர். இதனையடுத்து கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் விவசாயிகளை ஒன்றிணைத்து, கைஃபா அமைப்போடு இணைந்து அங்குள்ள குளங்களை தூர்வாரும் பணியை தொடங்கியுள்ளனர். தற்போது குளத்தை தூர்வாரி தண்ணீரை சேமிக்கும்போது, சுமார் 500 ஏக்கர் பாசனம் பெறுவதோடு நெடுவாசலில் நிலத்தடி நீர் மட்டமும் உயரும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

(சுப.முத்துப்பழம்பதி, செய்தியாளர்)
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com