குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் நோய்கள் பரவும் அபாயம்: பொதுமக்கள் அச்சம்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரால், டெங்கு மற்றும் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ளது எம்.மலம்பட்டி. இங்குள்ள பாரதிதாசன் தெருவில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கழிவுநீர் செல்ல வாய்க்கால்கள் இல்லாததால், குடியிருப்புகளுக்கு மத்தியில் கழிவுநீர் தேங்கி இருக்கின்றது.
மேலும் கழிவுநீர் தேங்கி இருக்கும் இடத்திற்கு அருகிலேயே குடிதண்ணீர் குழாயும் இருப்பதால், அவ்வப்போது கழிவுநீரும் குடிநீரில் கலந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த கழிவுநீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் மூலம் காய்ச்சல், மற்றும் தொற்றுநோய் ஏற்படுவதுடன், டெங்கு மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அத்துடன், இந்த நீரை பருகுவதால் வயிற்றுப்போக்கு போன்ற உடல் உபாதைகளும் ஏற்படுவதாக வேதனையோடு தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மேலூர் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.