புதுச்சேரி| முடிவுக்கு வந்த NDA சீட் ஷேரிங்.. அதிமுகவிற்கு பெரிய அடி.. NRC, BJP-க்கு எத்தனை சீட்..?
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு முடிவுக்கு வந்துள்ளது. என்.ஆர்.காங்கிரஸ், பாஜக அதிக இடங்களில் போட்டியிடுகின்றன.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான புதுச்சேரி அரசியல் களமும் தொகுதிப் பங்கீட்டில் கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. புதுச்சேரி முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி, கடந்த மாதமே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிப்பதை உறுதி செய்துவிட்டாலும், என்டிஏ கூட்டணியில் தொகுதிப்பங்கீடு மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ப்பதில் குழப்பம் நீடித்துவந்தது.
கடந்த, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் 16 இடங்களில் போட்டியிட்டது. கூட்டணி கட்சிகளான பாஜக 9 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும் போட்டியிட்டது. இந்த சூழலில், இந்த முறை பாஜக அதிக இடங்களில் போட்டியிட தொகுதிகளை ஒதுக்கவேண்டும் என வலியுறுத்தியது. ஆனால் முன்பு போட்டியிட்ட 16 இடங்களிலேயே போட்டியிடும் முடிவில் என்.ஆர். காங்கிரஸ் திடமாக இருந்தது. மேலும் கூட்டணிக்குள் வேறு கட்சிகளை சேர்க்கும் முடிவுக்கும் என்.ஆர்.காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்தசூழலில் தான் என்.டி.ஏ கூட்டணியில் தொகுதிப்பங்கீடு ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கட்சிகளிடையே தொகுதி ஒதுக்கீடு கையெழுத்தானது. புதுச்சேரி தனியார் விடுதியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என். ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகளும், பாஜகவுக்கு 10 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அதிமுகவுக்கும், புது வரவான லட்சிய ஜனநாயக கட்சிக்கும் தலா இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 2021 சட்டமன்றத்தேர்தலில் அதிமுவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது 3 தொகுதிகள் குறைக்கப்பட்டுள்ளன. கடந்த முறை 9 இடங்களில் போட்டியிட்ட பாஜகவுக்கு தற்போது கூடுதலாக ஒரு இடம் வழங்கப்பட்டுள்ளது.

