ஒரு லிட்டர் இயற்கை பெட்ரோல் ரூ.4 - ராமர்பிள்ளையின் அறிவிப்பு
தமிழகத்தில் இன்னும் இரண்டு, மூன்று தினங்களில் இயற்கை எரிபொருள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என ராமர்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இயற்கை மூலிகை மூலம் பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரம் தயாரிக்கலாம் என கூறி வந்த ராமர்பிள்ளை ஆகஸ்ட் 15 முதல் எரிபொருட்களை விற்பனை செய்வதாக தெரிவித்து வந்தார். இந்த நிலையில் இயற்கை எரிபொருள் தயாரிப்பு குறித்த ஆய்வு கூடத்தை சென்னை நொளம்பூரில் இன்று திறக்க இருந்தார். அதனை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். ஆய்வு கூடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆய்வு கூடம் அமைப்பதற்கான சான்றுகளை காவல்நிலையத்தில் வைத்து சரிபார்த்தனர்.
இதனை தொடர்ந்து முறையான அனுமதி பெற்ற பின்னர் கூடத்தை திறக்குமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ராமர்பிள்ளை கூறுகையில், “நொளம்பூரில் ஆய்வு கூடம் திறப்பதாக இருந்தோம். காவல்துறையினர் அதனை விசாரித்து சென்றுள்ளனர். எரிபொருள் தயாரிப்பு ஆலை அமைக்க விருதுநகரில் உரிமம் பெற்றுள்ளோம். இன்னும் இரண்டு, மூன்று தினங்களில் கட்டாயம் ஒரு லிட்டர் பெட்ரோல் 4 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 5 ரூபாய்க்கும் கிடைக்கும். அத்துடன் ஒரு மெகாவாட் மின்சாரம் 1000 ரூபாய்க்கு கிடைக்கும்” என தெரிவித்தார்.