மழைநீரில் கச்சாஎண்ணெய் கலப்பு: ”நிபுணர் குழுவை ஏன் அமைக்கவில்லை?” பசுமைத் தீர்ப்பாயம் சரமாரி கேள்வி?

கச்சா எண்ணெய் கலந்துள்ளதாக, டிசம்பர் 12ஆம் தேதி விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என குழுவுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
கச்சா எண்ணெய், பசுமைத் தீர்ப்பாயம்
கச்சா எண்ணெய், பசுமைத் தீர்ப்பாயம்ட்விட்டர்

மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையில் சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளித்தது. பல இடங்களில் வெள்ளம் வடிந்துள்ள நிலையில், சில பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் மிதக்கின்றன.

இந்த நிலையில், வடசென்னையில் மணலி, திருவொற்றியூர், பக்கிங்ஹாம் கால்வாய் பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ளநீரில் கச்சா எண்ணெய் கலந்துள்ளதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது. இந்நிலையில், ஊட்டி ஏரியில் சுற்றுலா வளர்ச்சிக்காக கட்டுமானங்கள் மேற்கொள்வது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, சென்னை மணலியில் வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கல்ந்துள்ளதாய் தொடர்பான வீடியோ மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த செய்திகளை சுட்டிக்காட்டிய தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வு கேள்வி எழுப்பியது. அப்போது, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனங்கள் சார்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர், வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்துள்ளதை விசாரிப்பதாகவும், இதற்கான தீர்வு என்ன என்பது குறித்து எண்ணெய் நிறுவனங்களின் கருத்துக்களை பெற்று தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

தமிழக அரசு சார்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர், இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை தீர்ப்பாயம் இன்று (டிசம்பர் 9) தள்ளிவைத்துள்ளது.

இதைத் தொடர்ந்து, நீதித்துறை உறுப்பினர் நீதிமன்ற புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாசுகட்டுப்பாடு வாரியம் சார்பில், கச்சா எண்ணெய் கசிவை ஆய்வு செய்ததில், சென்னை பெட்ரோலிய கழகத்தின் தெற்கு நுழைவு வாயிலில் இருந்து தடயங்கள் தெரிவதாகவும், அது பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக பரவியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதுவரை நடத்திய விசாரணையில், வெள்ள நீரில் வேண்டுமென்றே கச்சா எண்ணெய் கலக்கப்பட்டதாக எந்த ஆதாரங்களும் இல்லை என்றும், எண்ணெய் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருவதாகவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட தீர்ப்பாய உறுப்பினர்கள், 5 கி.மீ சுற்றளவிற்கு எண்ணெய் படலங்கள் பரவியுள்ள நிலையில், அதை எப்படி தடயம் என கூற முடியும் என்று கேள்வி எழுப்பினர். மேலும், நீர் வளத்துறை அறிக்கையில் பெருமளவு எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டினர்.

அப்பகுதி மக்கள் அன்றாட வாழ்க்கை நடத்த இயலாத நிலையில் உள்ளதாக கூறிய தீர்ப்பாயம், எவ்வளவு எண்ணெய் சேகரிக்கபட்டுள்ளது, எண்ணெய் பரவலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? உண்ணைமை நிலையை அறிய தமிழக அரசு ஏன் இன்னும் நிபுணர் குழுவை அமைக்கவில்லை என அடுக்கடுக்கான கேள்விகளைத் தொடுத்தது. இதற்குப் பதிலளித்த மாசுக் கட்டுப்பாடு வாரியம், குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக விளக்கம் அளித்தது. தொடர்ந்து, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப்பாயம், இதுதொடர்பாக குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டது.

எண்ணெய் கசிவு ஏற்பட்ட பகுதிகளில் டிசம்பர் 11ஆம் தேதி நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும், வீடுகளில் படிந்துள்ள எண்ணெய் கசிவு படலத்தின் மாதிரிகளை சேகரித்து, அதில் கலந்துள்ள ரசாயனம் என்ன என்பதையும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதையும் கண்டறிந்து, டிசம்பர் 12ஆம் தேதி விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என குழுவுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

மேலும், மாசுகட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்டு வரும் ஆய்வு அறிக்கையையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 12 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com