பேனா நினைவுச் சின்னம்: மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்ய நாராயணன், நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபல் ஆகியோர் அமர்வு முன் இந்த மனு மற்றும் வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
பேனா நினைவுச் சின்னம் மாதிரி படம்
பேனா நினைவுச் சின்னம் மாதிரி படம்புதிய தலைமுறை

கலைஞர் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை எதிர்த்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு. மத்திய மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிராக தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை மூன்றாக அதிகரிகரித்துள்ளது.

மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியின் தமிழ் மொழிக்கான பங்களிப்பை போற்றும் வகையில் 81 கோடி ரூபாய் மதிப்பில் 134 அடி உயர பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையும் அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் மத்திய சுற்றுச்சூழல் துறை வழங்கிய அனுமதியை எதிர்த்து, தூத்துக்குடியை சேர்ந்த ராம் ஆதித்தன் என்பவர் இன்று மனுத் தாக்கல் செய்திருந்தார். இதேபோல் இதற்கு முன்னர், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வெண்ணிலா தாயுமானவன், சென்னையை சேர்ந்த மீனவர் பாரதி ஆகியோர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்து வழக்கு விசாரணையில் உள்ளது.

இந்த சூழலில் சென்னை சேப்பக்கத்தில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின், நீதித் துறை உறுப்பினர் புஷ்பா சத்ய நாராயணன், நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அமர்வு முன் இந்த மனு மற்றும் வழக்கின் மீதான விசாரணை நடைபெற்றது.

கருணாநிதி, பேனா சின்னம், மத்திய அரசு
கருணாநிதி, பேனா சின்னம், மத்திய அரசுfile image

அப்போது, கடலோர ஒழுங்குமுறை மண்டல வகைப்பாட்டில் CRZ 1A என்ற பிரிவில் வரும் பகுதியை CRZ 4A எனக் கூறி நினைவுச் சின்னம் அமைப்பதற்கு அனுமதி பெற்றுள்ளதாக ராம்குமார் ஆதித்தன் தரப்பும்,

பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தரவுகளின் பிழை உள்ளதாகவும், தவறான தகவல் மூலம் இந்த நினைவுச் சின்னம் அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் மீனவர் பாரதி தரப்பு வாதிட்டனர்.

பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்து கேட்பு முறையாக நடத்தப்படவில்லை. பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படுவதற்கு வழங்கப்பட்ட அனுமதி முறையானது இல்லை எனவும் வாதிடப்பட்டது.

இதனைக் கேட்டறிந்த தீர்ப்பாய அமர்வு, நாம் தமிழர் கட்சி சார்பில் வெண்ணிலா தாயுமானவன் மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த ராம்குமார் வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு நவம்பர் 06-ஆம் தேதிக்கும், சென்னையை சேர்ந்த மீனவர் பாரதி வழக்கில் மத்திய மாநில அரசுகள் இம்மாதம் 30-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com