தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் கன்னியாகுமரிக்கு விரைவு
'ஒகி' புயல் காரணமாக பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர்.
கன்னியாகுமரி அருகே நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் இன்று காலை ஒகி புயலாக மாறியது. ஒகி புயல் காரணமாக, குமரி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் காலை 11 மணி வரை பலத்த காற்றோடு கன மழை பெய்தது. அதன் பிறகு மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளின் இரு பக்கங்களிலும் ஏராளமான மரங்கள் சாலையில் விழுந்துள்ளன. மழை மற்றும் புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட மரங்கள் சாலையில் விழுந்துள்ளதாகவும், 985 மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து 60 பேர் அடங்கிய இரண்டு குழுவினராக தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் விரைந்துள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் தகவல் தெரிவித்துள்ளார். இதனிடையே பாதிக்கப்பட்ட இடங்களில் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் சாலையில் முறிந்து விழுந்த மரங்களை அகற்றுதல், பாதிக்கப்பட்ட மக்களை மீட்பது உள்ளிட்ட மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

