விஜயபாஸ்கரையும்தான் விசாரிப்பார்கள்: நத்தம் விஸ்வநாதன்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டால் அமைச்சர் விஜயபாஸ்கரும்தான் விசாரிக்கப்படுவார் என்று ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக மத்திய அரசு விசாரணை கோரி நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் ஓபிஎஸ் அணியினர் மனு அளித்தனர். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது விஜயபாஸ்கர் நேரில் பார்த்தாரா என்று கேள்வி எழுப்பினார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டால் விஜயபாஸ்கரும்தான் விசாரிக்கப்படுவார் என்றும் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.
ஜெயலலிதா மரணம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளித்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார். அதில், ஓ.பன்னீர்செல்வத்துக்குத் தெரியாமல் ஜெயலலிதாவுக்கு எந்த சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டால் ஓ.பன்னீர்செல்வமும் விசாரிக்கப்படுவார் என்று விஜயபாஸ்கர் கூறியிருந்தார்.