"ஜெயலலிதா மரணத்தில் ஏதோ நடந்துள்ளது; ஓபிஎஸ்-க்கு ஒன்றும் தெரியாது" - நத்தம் விஸ்வநாதன்

"ஜெயலலிதா மரணத்தில் ஏதோ நடந்துள்ளது; ஓபிஎஸ்-க்கு ஒன்றும் தெரியாது" - நத்தம் விஸ்வநாதன்

"ஜெயலலிதா மரணத்தில் ஏதோ நடந்துள்ளது; ஓபிஎஸ்-க்கு ஒன்றும் தெரியாது" - நத்தம் விஸ்வநாதன்
Published on

ஜெயலலிதா மரணம் குறித்து ஓபிஎஸ்க்கு ஒன்றும் தெரியாததால்தான் கமிஷன் முன்பு ஆஜராகவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திண்டுக்கல்லில் பேட்டியளித்துள்ளார். 

திண்டுக்கல் மாவட்ட கிழக்கு அதிமுக கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று திண்டுக்கல் அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சசிகலாவிற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நத்தம் விஸ்வநாதன், "கோடிக்கணக்கான தொண்டர்கள் உள்ள அதிமுகவை குறுக்கு வழியில் கைப்பற்றி விட வேண்டும் என்ற நோக்கத்தில் சசிகலா நாடகமாடி வருகிறார். தொலைபேசியில் பேசினால் கட்சியை கைப்பற்றி விட முடியுமா? நகைப்புக்குரியது. அதிமுகவில் சசிகலாவால் ஒரு சதவிகித பாதிப்பைக்கூட ஏற்படுத்த முடியாது. சசிகலாவை மீண்டும் கட்சியில் ஏற்றுக்கொள்ள யாரும் தயாராக இல்லை" என்று கூறினார். 

அதனைத் தொடர்ந்து தாயும் பிள்ளையும் பிரிக்க முடியாது என சசிகலா பேட்டி கொடுத்துள்ளது குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, "சசிகலா தாய் இல்லை பேய். தாய் என்று சசிகலா தன்னைத்தானே தான் கூறிக்கொள்ள வேண்டும். சசிகலா ஒரு அரசியல் சக்தியே கிடையாது. சசிகலா என்பது அரசியலில் தவிர்க்கமுடியாத சக்தி அல்ல; அது தவிர்க்கப்பட வேண்டிய சக்தி" என்று பதிலளித்தார்.

மேலும், ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷனில் அதிமுக கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகாதது குறித்த கேள்விக்கு, "ஜெயலலிதாவின் மரணத்தில் ஏதோ ஒன்று நடந்துள்ளது. அதுகுறித்து ஓபிஎஸ்-க்கு ஒன்றும் தெரியாது. அதில் என்ன நடந்துள்ளது என அவருக்குத் தெரியாது. ஆகையால்தான் அவர் கமிஷனில் ஆஜராகி தகவல் தெரிவிக்கவில்லை. ஜெயலலிதாவிற்கு என்ன நடந்தது என்பது சசிகலாவிற்கு மட்டுமே தெரியும். அந்த அம்மாவிற்கு மனசாட்சியும் கிடையாது மண்ணாங்கட்டியும் கிடையாது" என்று ஆவேசமாக பதிலளித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com