போதைப் பொருள் வழக்கு: மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக்-கிற்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்
செய்தியாளர்: V.M.சுப்பையா
முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு கைப்பேசி செயலி மூலம் போதைப் பொருள்களை விற்பனை செய்ததாக கல்லூரி மாணவர்கள் 5 பேர் ஜெ.ஜெ.நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், போதைப் பொருள் கடத்தலில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்-கிற்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஜெ.ஜெ.நகர் போலீசார், அலிகான் துக்ளக்கை டிசம்பர் 4ம் தேதி கைது செய்தனர்.
துக்ளக்கின் ஜாமீன் மனுவை சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அலிகான் துக்ளக் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில், அலிகான் துக்ளக்கிடம் இருந்து எந்த போதைப் பொருளும் பறிமுதல் செய்யவில்லை என்றும், மற்ற குற்றவாளிகள் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்ததாக தெரிவிக்கபட்டது.
இதையடுத்து, அலிகான் துக்ளக்கிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதி, தினமும் ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டுமென உத்தரவிட்டார்.