சசிகலா ஆணைகளை நிறைவேற்ற தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வேன் என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். எனவே மீண்டும் அவர் இனோவா காரை சுற்றுப்பயணத்திற்காக பெற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத், அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கட்சியில் இருந்து விலகி கடந்த 2012ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவி வழங்கியதுடன் இனோவா கார் ஒன்றையும் ஜெயலலிதா அப்போது வழங்கினார்.
இதனையடுத்து கடந்த டிசம்பர் மாதம் ஜெயலலிதா காலமானதை தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றார். இதனிடையே, ஜெயலலிதாவால் தனக்கு வழங்கப்பட்ட இன்னோவா காரை அதிமுக-வின் தலைமை அலுவலகத்தில் திரும்ப ஒப்படைத்தார் நாஞ்சில் சம்பத். இதுநாள் நாள் வரை கட்சிப் பணிகளுக்காகவே காரை பயன்படுத்தி வந்ததாகவும், ஒருபோதும் தன் சுய தேவைக்காக காரை பயன்படுத்தியதில்லை எனவும் தெரிவித்திருந்தார். மேலும், தற்போது பரப்புரை பணிகள் இல்லாததால் காரை ஒப்படைத்துள்ளதாகவும் விளக்கம் தெரிவித்திருந்தார். காரை திருப்ப ஒப்படைத்ததால் அதிமுக-வில் இருந்து நாஞ்சில் சம்பத் விலக போகிறார் எனவும் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக நாஞ்சில் சம்பத் அறிவித்தார்.
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை இன்று திடீரென சந்தித்த நாஞ்சில் சம்பத், அவரிடம் வாழ்த்து பெற்றார். மேலும் அதிமு-வில் தொடர்ந்து பணியாற்றுவேன் என கூறிய அவர், சசிகலா ஆணைகளை நிறைவேற்ற தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.
சந்திப்பின் போது.. ஏன் காரை கொடுத்தீர்கள்..? நானே உங்கள் வீட்டிற்கு காரை அனுப்பி வைக்கலாம் என நினைத்தேன்.. வீட்டிற்கு செல்லும் போது காரை எடுத்துக் கொண்டு செல்லுங்கள் என சசிகலா கூறியதாகவும் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். சசிகலாவிடம், தாங்கள் மனநிறைவு கொள்ளும்படியும் தொண்டர்கள் விருப்பப்படியும் பணிகள் அமையும் என தெரிவித்து விட்டு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். எனவே மீண்டும் நாஞ்சில் சம்பத் இனோவா காரை சுற்றுப்பயணத்திற்காக பெற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.