விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி எப்போது உதயமானது?

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி எப்போது உதயமானது?

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி எப்போது உதயமானது?
Published on

விக்கிரவாண்டி தொகுதி எப்போது தொடங்கப்பட்டது என்பது குறித்தும் அந்தப் பகுதியின் தனிச் சிறப்புகள் என்ன என்பது பற்றி சில தகவல்களை தெரிந்துக் கொள்ளலாமா?

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கண்டமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி, மறுவரையறை செய்யப்பட்டபோது நீக்கப்பட்டது. இதிலிருந்த சில பகுதிகள் வானூர் தொகுதியில் சேர்க்கப்பட்டன. விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு விக்கிரவாண்டி என்ற புதிய தொகுதி 2011-ஆம் ஆண்டில் உதயமானது.

மிகச்சிறிய இந்தத் தொகுதியில் விக்கிரவாண்டி மட்டுமே பேரூராட்சி. மற்ற அனைத்துமே கிராமங்கள்தான். விவசாயத்தையே பெரிதும் நம்பியிருக்கிறார்கள் தொகுதி மக்கள்.‌ ஒரு காலத்தில் விக்கிரவாண்டியில் உள்ள அரிசி ஆலைகளிலிருந்து தமிழகம் தாண்டி, பிற மாநிலங்களுக்கும் அரிசி மூட்டைகள் அணிவகுக்கும். தற்போது விவசாயம் பொய்த்துவிட்டதால், பெரும்பாலான அரிசி ஆலைகள் மூடியே கிடக்கின்றன.

2011-ஆம் ஆண்டில் உருவான விக்கிரவாண்டி தொகுதியில் முதல் எம்எல்ஏவாக தேர்வானவர், அதிமுக கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ராமமூர்த்தி. ‌201‌6-ஆம் ஆண்டு தேர்தலில் திமுக வேட்பாளரான ராதாமணி வெற்றி வாகை சூடினார். கடந்த ஜூன் மாதம் ராதாமணி‌ உடல்நலம் குன்றி உயிரிழந்ததால், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது.

2012-ம் ஆண்டு தாலுகாவாக அறிவிக்கப்பட்ட விக்கிரவாண்டியில் தொழில்வளம், வேலைவாய்ப்பு என்று பெரிதாக எதுவும் இல்லை. அரசு கல்லூரிகள், தொழிற்கல்வி நிலையங்களும் இல்லை என்பதால், மாணவர்கள் விழுப்புரம்தான் செல்ல வேண்டும். விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைந்திருக்கும் முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி தொகுதியில்தான் வருகிறது.

விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 23 ஆயிரத்து 387 வாக்காளர்கள் உள்ளனர். அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வனும், திமுக சார்பில் புகழேந்தியும் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக கந்தசாமி களத்தில் உள்ளார். திரைப்பட இயக்குநர் கௌதமன் உள்ளிட்ட சுயேச்சைகள் 9 பேரும் போட்டியிடுகிறார்கள்.

ஏராளமான தேவைகளுடன் மக்கள் பிரதிநிதியை தேர்வு செய்ய எதிர்பார்ப்புகளை குவித்து வைத்து‌ காத்திருக்கும் வாக்காளர்கள் யாரை தேர்வு செய்வா‌ர்கள் என்று அறிய, அக்டோபர் 24-ஆம் தேதி வரை காத்திருப்போம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com