விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் - இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 தொகுதி இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி, புதுச்சேரியில் காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளுக்கு வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் 12 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். திமுக சார்பில் புகழேந்தியும், அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வனும் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமி போட்டிக் களத்தில் உள்ளார். மேலும், இயக்குநர் கவுதமன் உட்பட 9 சுயேட்சைகளின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் 23 வேட்புமனுக்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. அதிமுக வேட்பாளர் நாராயணன், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சியின் ராஜ நாராயணன் ஆகியோர் களத்தில் உள்ளனர். இவர்களை தவிர மற்ற 20 சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜான் குமார், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் புவனேஷ்வரன், நாம் தமிழர் கட்சி சார்பில் பிரவீணா மதியழகன் உள்ளிட்ட 9 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.