நமோ டிவிக்கு அனுமதி கொடுத்தது ஏன்? - தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
பிரதமர் மோடி பெயரிலான நமோ டிவியை தேர்தலுக்கு சற்று முன் தொடங்க அனுமதி அளித்தது குறித்து மத்திய அரசிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், நமோ டிவி என்ற பெயரில் பிரதமர் மோடிக்கு ஆதரவான சேனல் ஒளிரப்பை தொடங்கி, செயல்பட்டு வருகிறது. இதற்கு எப்படி அனுமதி தரப்பட்டது என்று காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி கட்சிகள் கேள்வி எழுப்பின. இதுகுறித்து அக்கட்சிகள் அளித்த புகாரை அடுத்து, தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கோரியுள்ளது.
மோடியின் படத்தை இலச்சினையாகக் கொண்ட நமோ டிவி கடந்த மாதம் 31ம் தேதி ஒளிபரப்பை தொடங்கியது. 24 மணி நேரமும் மோடியின் பேச்சுக்களை இந்தத் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருவது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நேரத்தில் ‘மோடி’ வாழ்க்கையை மையமாக கொண்ட திரைப்படம் ரிலீஸ் செய்யப்படுவது தொடர்பாக ஏற்கனவே சர்ச்சைகள் கிளம்பியுள்ள நிலையில், தற்போது ‘நமோ டிவி’புதிய சர்ச்சையாக மாறியுள்ளது.