நாமக்கல் | ஆம்னி கார் மோதி பயங்கர விபத்து – நடைப்பயிற்சி சென்ற தம்பதியர் உட்பட 3 பேர் உயிரிழப்பு!
செய்தியாளர்: எம்.துரைசாமி
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மலையண்ணன் (68), நிர்மலா(55) தம்பதியர். இவர்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த செல்லம்மாள் (65) ஆகிய மூவரும் இன்று அதிகாலை மோகனூர் நாமக்கல் நெடுஞ்சாலையில் நடைப்பயிற்சி சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது நாமக்கல்லில் இருந்து மீன்களை ஏற்றிக் கொண்டு வந்த ஆம்னி காரை மணிகண்டன் என்பவர் ஓட்டி வந்ததாக தெரிகிறது. இந்த கார் சாலை ஓரமாக நடந்து சென்ற 3 பேர் மீதும் மோதியதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மோகனூர் காவல் துறையினர் 3 உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காயம் அடைந்த ஓட்டுநர் மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதையடுத்து இச்சம்பவம் குறித்து மோகனூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.