நாமக்கல்: தங்கையை அழைக்கச் சென்ற சகோதரி... சாலை விபத்தில் தாயுடன் சேர்ந்து பலியான சோக நிகழ்வு!
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே சின்னார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜவேல் - தவமணி தம்பதியினர். இவர்களுக்கு நான்கு மகள்கள் உள்ளனர். மூன்றாவது மகளுக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணமாகிய நிலையில் இறையமங்கலம் பகுதியில் அவர் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஆடி பண்டிகை வர இருப்பதால் தனது மகளை அழைக்க தாய் தவமணி மூத்த மகள் இந்துமதியுடன் இருசக்கர வாகனத்தில் அவர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின் வீடு திரும்பிக் கொண்டிருக்கையில், கொக்கராயன்பேட்டை பகுதி அருகே கரும்பு ஏற்றி வந்த ட்ராக்டரொன்று இவர்களின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இவ்விபத்தில் மகள் இந்துமதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். படுகாயமடைந்த தாய் தவமணி சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரும் வழியில் உயிரிழந்தார்.
இதற்கிடையே விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பள்ளிபாளையம் போலீசார் போக்குவரத்தை சரிசெய்து திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த ட்ராக்டர் ஓட்டுநர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆடி பண்டிகைக்கு தங்கையை அழைக்க அம்மாவுடன் சென்ற அக்கா, சாலை விபத்தில் தாயுடன் பலியான சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.