நாமக்கல் | பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த கும்பல்.. பிடித்து விசாரித்ததில் வெளியான பகீர் தகவல்
செய்தியாளர்: எம்.துரைசாமி
நாமக்கல் உதவி காவல் ஆய்வாளர் சாந்தகுமார் தலைமையிலான காவல் துறையினர் பலப்பட்டரை மாரியம்மன் கோயில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த சிலர் போலீசாரை கண்டதும், திரும்பிச் செல்ல முயன்றதாக தெரிகிறது. இதையடுத்து சுதாரித்துக் கொண்ட போலீசார், அந்த காரை சுற்றி வளைத்து சோதனை செய்தனர். அப்போது காரில், பட்டா கத்தி ஒன்றும், சிறிய கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து காரில் வந்த பள்ளி காலனியைச் சேர்ந்த அஜய் பிரபாகர் (26), மாரி கங்காணி தெருவைச் சேர்ந்த லோகேஸ்வரன் (32), என்.கொசவம்பட்டி குணசேகரன் (48) வெள்ளவாரி தெரு கிருபாகரன் (32) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், குணசேகரன் கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருவதும், மனைவியின் உறவினர்களுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கத்தியுடன் சுற்றித் திரிந்ததும் தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து கார் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்த காவல் துறையினர் 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.