விடுப்பு தராமல் டார்ச்சர் செய்தே கொன்றுவிட்டீர்களே... கதறிய தங்கை; ஓய்வறையிலே உயிரிழந்த பெண் எஸ்.ஐ!
ஓய்வறையில் இருந்த எஸ்.ஐ சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் போலீஸ் தரப்பு என்ன சொல்கிறது? நடந்தவை குறித்து விரிவாக பார்க்கலாம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் 48 வயதான காமாட்சி என்பவர், பேளுக்குறிச்சி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இதற்கிடையே, நேற்று இரவு ரோந்து பணி முடித்துவிட்டு நள்ளிரவு 2 மணியளவில் காவல் நிலையம் சென்றடைந்த காமாட்சி, அங்கிருக்கும் ஒய்வறையில் உறங்கியதாக கூறப்படுகிறது.
காலை 6 மணியளவில் தனது கணவர் விஜயகுமாருக்கு போன் செய்தவர், தன்னால் வீட்டுக்கு வர முடியாது என்றும், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புமாறும் கூறியுள்ளார். தொடர்ந்து, ஒரு மணி நேரம் கழித்து கணவர் விஜயகுமார், காமாட்சிக்கு இரண்டு முறை போன் செய்தும் அவர் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், 11.30 மணி அளவில் விஜயகுமாருக்கு ஃபோன் செய்த ராசிபுரம் காவல் கண்காணிப்பாளர், காமாட்சி இறந்துவிட்டதாக கூறியுள்ளார். காவல்நிலையத்தில் காமாட்சி இறந்து கிடந்ததை கண்ட அவரது உறவினர்கள், பணிச் சுமை காரணமாகத்தான் இறந்து விட்டார் என்றும்.
இறந்த பின்னும் ஏன் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவில்லை என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்பு ராசிபுரம் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் நேரில் சென்று சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து, அவரது உடல் உடற்கூறாய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவரது உடல் வைக்கப்பட்டிருந்த வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், நாமக்கல் மாவட்ட காவல் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் பெண் எஸ்.ஐக்கு கடந்த 90 நாட்களில் 42 நாட்கள் மருத்துவ விடுப்பும், 2 நாட்கள் சாதாரண விடுப்பும், 3 நாட்கள் அனுமதி விடுப்பும், ஒரு நாள் திருமண நாள் சிறப்பு அனுமதி விடுப்பு என்று மொத்தம் 46 நாட்கள் விடுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், சிலர் பொய்யான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்பி காவல்துறை மீது அவதூறை பரப்பி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பெண் எஸ்.ஐ ஓய்வு அறையிலே இறந்து கிடந்ததால், பணிச்சுமை காரணமா? மாரடைப்பால் இறந்தாரா என்று விசாரணை நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக மாரடைப்பால் மரணித்திருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படும் நிலையில், காமாட்சியின் தங்கை காவல்நிலையத்திற்கு சென்று வாக்குவாதம் செய்த வீடியோ வெளியாகியுள்ளது.. நீங்கள் கொடுத்த டார்ச்சராலேயே காமாட்சி இறந்துவிட்டார் என்றும், முதலுதவி சிகிச்சை கூட தரவில்லையே என்றும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.