குட்டையைக் காணோம்... வழியைக் காணோம்..: பொதுமக்கள் அதிர்ச்சி
திருச்செங்கோடு அருகே முனியப்பன் கோயில் முன்புறம் இருந்த குட்டையைக் காணவில்லை என்றும் கோயிலுக்குச் செல்லும் வழியை காணவில்லை என்றும் பொதுமக்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ளது சின்னத்தம்பி பாளையம். இங்கு 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீராதி வீரன் பெரியசாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு மாசி மாதம் சித்திரை மாதம் மற்றும் ஆடி மாதங்களில் உறவினர்கள் ஒன்றுகூடி பொங்கல் வைப்பது வழக்கம். 300 ஆண்டு காலமாக அவ்வாறு வழிபட்டு வந்த கோயிலின் அருகே குட்டை மற்றும் ஓடை இருந்துள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டு ஆடி பதினெட்டு விழா கொண்டாடுவதற்காக உறவினர்கள் சேலம், நாமக்கல், சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கோயிலுக்குச் செல்ல வேண்டிய வழித்தடமும் கோயிலின் அருகே உள்ள குட்டையும் அழிக்கப்பட்டு, அதன் மீது பெட்ரோல் பங்க் கட்டிடம் கட்டுவதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மலசமுத்திரம் காவல்நிலையத்தில் தங்கள் கோயிலின் அருகே உள்ள குட்டை மற்றும் ஓடை வழித்தடத்தை காணவில்லை எனப் புகார் செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மலசமுத்திரம் காவல்துறையினர் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்த குட்டை வழித்தடம், ஓடை ஆகியவை அழிக்கப்பட்டு கட்டடம் கட்டி உள்ளது தெரிய வந்தது. இந்தக் கட்டடத்தை சின்னத்தம்பி பாளையத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் கட்டியுள்ளதாக தெரியவந்தது. இது குறித்து நாளை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்