துண்டுச் சீட்டு குறிப்புகள் மூலம் ஆட்சியைக் கவிழ்க்கலாம் என கனவுகண்டால், நாட்டில் மக்களாட்சி என்பதே இல்லாமல் போய்விடும் என அதிமுக அம்மா அணியின் நாளிதழான நமது எம்ஜிஆரில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி சோதனை தொடர்பாக விசாரணை நடந்தால் தமிழக அரசு கவிழ வாய்ப்பு இருப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருந்தார். இதனை விமர்சித்து கட்டுரை வெளியிட்டுள்ள நமது எம்ஜிஆர், சஹாரா குழும வருமான வரிச் சோதனை விவகாரத்தில் நரேந்திர மோடிக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் கிடைத்த ஆவணத்தின் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் என தமிழிசை குறிப்பிடுகிறாரா என கேள்வி எழுப்பியுள்ளது. அவ்வாறு விசாரணை நடத்தினால் மத்திய அரசுதான் கவிழ வேண்டும் என நமது எம்ஜிஆர் நாளிதழ் தெரிவித்துள்ளது.
உத்தராகண்ட், அருணாச்சலப்பிரதேசம், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் ஜனநாயகத்தை பலியிட்டு வரும் பாரதிய ஜனதா, அதனை தமிழகத்திலும் நடத்திப்பார்க்கலாம் என ஆசைப்பட்டால் அது விஷப்பரீட்சை என விமர்சிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆட்சியைக் கலைக்கலாம் என நினைக்கும் கட்சி, தமிழகத்தின் எல்லையிலிருந்தே விரட்டியடிக்கப்படும் என்றும் அதிமுக அம்மா அணி நாளிதழான நமது எம்ஜிஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.