“நக்கீரனின் புலனாய்வு தொடரும்” - கோபால் பேட்டி
ஆளுநர் குறித்து செய்தி வெளியிட்டதற்காக 124 பிரிவின் கீழ் ‘நக்கீரன்’ கோபாலை சென்னை போலீசார் இன்று கைது செய்தனர். பின்னர், எழும்பூர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ‘நக்கீரன்’ கோபால் மீதான 124 பிரிவை நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், நீதிமன்றக் காவலில் வைக்கவும் மறுப்பு தெரிவித்தது.
இதனையடுத்து, வழக்குப் பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் வெளியே வந்த‘நக்கீரன்’ கோபால் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். “கருத்துச் சுதந்திரத்தின் பக்கம் நின்ற நீதித்துறைக்கு நன்றி. ராஜ்பவன் பற்றி ஒரு செய்தி வந்தது. அதனை புலனாய்வு செய்து செய்தி வெளியிட்டோம். அந்தச் செய்தி தொடர்பாக என்னை கைது செய்தார்கள்.
சென்னை விமான நிலையத்தில் என்னை கைது செய்த போது எதற்காக கைது செய்தார்கள் என்பது தெரியவில்லை. என்னை டிசி பார்க்க வேண்டும் என்று கூறிதான் சில அதிகாரிகள் அழைத்துச் சென்றார்கள். விசாரிப்பதற்காக அழைத்து செல்வதாக கூறினார்கள். என்னுடைய போனை வாங்கிக் கொண்டார்கள். என்னுடன் வந்தவர்களுடன் பேச கூட அனுமதிக்கவில்லை. இது என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. சென்னை விமான நிலையத்தில் இருந்து என்னை சிந்தாதரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள். எழும்பூர் நீதிமன்றம் அழைத்துச் செல்லும் வரை எதற்காக கைது செய்தார்கள் என்பது தெரியவில்லை.
பின்னர்தான், ஆளுநர் தொடர்பாக எழுதிய கட்டுரைக்காக கைது செய்தார்கள் என்பது தெரிய வந்தது. கைது செய்தது முதல் என்னுடன் திருமாவளவன், முத்தரசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் உடன் இருந்தார்கள். இந்து என்.ராம் தானாக நீதிமன்றம் வரை வந்திருந்தார். நீதிபதி கேட்டுக் கொண்டதற்கு இணங்க என்.ராம் 124 பிரிவு தொடர்பான தனது கருத்துக்களை தெரிவித்தார். அவருக்கு என நன்றி. அதேபோல், தனக்காக பேசிய ஊடகங்கள், ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி. புலனாய்வு செய்து செய்தி வெளியிடும் ‘நக்கீரன்’ பணி தொடரும்” என்றார்.