நக்கீரன் கோபால் கைது: 124 சட்டப்பிரிவு சொல்வது என்ன?

நக்கீரன் கோபால் கைது: 124 சட்டப்பிரிவு சொல்வது என்ன?

நக்கீரன் கோபால் கைது: 124 சட்டப்பிரிவு சொல்வது என்ன?
Published on

நக்கீரன் கோபால் மீது சட்டப்பிரிவு 124-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் சென்னை விமான நிலையத்தில் இன்று காலை கைது செய்யப்பட்டார். சென்னையில் இருந்து புனே செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்த அவரை, காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்படுவதற்கு முன் விமான நிலையத்தில் அவரிடம் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

தற்போது நக்கீரன் கோபால் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 124-ன் கீழ் ஜாம்பஜார் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  திருவல்லிக்கேணி துணை ஆணையர் அலுவலகத்தில் கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆளுநர் மாளிகை அளித்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. நிர்மலாதேவி விவகாரத்தை பற்றி நக்கீரன் இதழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதப்பட்டு வந்தன. இதன்காரணமாக அந்த இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால் மீது ஆளுநர் மாளிகை புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டப்பிரிவு 124 சொல்வது என்ன..?

அரசியலமைப்பு பதவியில் உள்ளவர்களின் பணிகளை பாதுகாக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டதே பிரிவு 124.  குடியரசுத்தலைவர் மற்றும் ஆளுநரின் பணிகளை தவறாக சித்தரித்தல் அல்லது ஆதாரப்பூர்வமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து செய்திகளை பிரசுரித்தல் மற்றும் அதனை வெளியிடுதல் மூலம் ஆளுநரையோ, குடியரசுத் தலைவரையோ அவர்களது பணியை செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் இடையூறு செய்தல் எனப் பல குற்றச்சாட்டுகளை குறிப்பிடும் சட்டப்பிரிவு 124 பிரிவின் கீழ் நக்கீரன் கோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தக் குற்றத்திற்காக அதிகப்பட்சமாக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் கூடிய, ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாகவும் அபராத தொகையையும் விதிக்க இந்தச் சட்ட விதி அனுமதி அளிக்கிறது.

இந்தச் சட்டப்பிரிவு குற்றம்சாட்டப்பட்டவரை எந்தவித பிடியாணையுமின்றி கைது செய்யவும் அவர்களை விசாரிக்கவும் போலீசாருக்கு அதிகாரம் அளித்துள்ளது. இதற்காக நீதிமன்றத்தின் அனுமதியை பெறத் தேவை இல்லை. அதற்கான கட்டாயமில்லை. அப்படிபட்ட குற்றமாக இல்லாதபட்சத்தில் பிடியாணையின்றி குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்ய போலீசாருக்கு அதிகாரம் இல்லை. மேலும் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் விசாரணையையும் மேற்கொள்ள முடியாது.

நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து மட்டுமே இந்த பிரிவில் தொடரப்படும் வழக்குகளை உரிய விசாரணை மேற்கொண்டு ரத்து செய்ய முடியும். ஏனெனில் குற்றத்தின் தன்மை ஆழமாகவும், குற்றவியல் தன்மையோடும் இருப்பதால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பித்து விட கூடும் என்பதன் அடிப்படையில் இது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com