“உண்மையை மறைக்க சதி”- கோபால் கைதுக்கு மா.கம்யூ., கண்டனம்
நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டிருப்பதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் வகையில் கோபால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பல உண்மைகளை மூடி மறைக்க மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சதியே இது எனத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் எதிர்க்கட்சியினர் மற்றும் மக்கள் உரிமைகளுக்காக போராடும் பல அமைப்புகளை சேர்ந்தவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது அன்றாட நடவடிக்கையாக மாறியுள்ளது எனக் கூறியுள்ள கே.பாலகிருஷ்ணன், தமிழகத்தில் பத்திரிகையாளர் , ஊடகவியலாளர் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதுதவிர பத்திரிகை ஆசிரியர் கோபால் கைதுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.