நாகை: “ஏன் ஹிஜாப் அணிந்திருக்கிறீர்கள்?” - பெண் மருத்துவரை அடாவடியாக மிரட்டும் பாஜக நிர்வாகி! #Video

இரவு நேரத்தில் பெண் மருத்துவரின் அனுமதியின்றி அவரை வீடியோ எடுத்து, மதரீதியாக அவரை தாக்கி பேசிய பாஜக நிர்வாகியின் செயலுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம் எழுந்துள்ளது.

நாகை மாவட்டம் திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் ஜன்னத் என்ற பெண் மருத்துவர் பணியாற்றிவருகிறார். இவர் நேற்று இரவுப்பணியில் இருந்துள்ளார். அப்போது திருப்பூண்டி பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் புவனேஸ்வர் ராம் என்பவர், இரவு 11.30 மணியளவில் பெண் மருத்துவரின் அறைக்குள் அத்துமீறி புகுந்துள்ளார்.

பாஜக நிர்வாகி புவனேஸ்வர் ராம் மிரட்டல்
பாஜக நிர்வாகி புவனேஸ்வர் ராம் மிரட்டல்PT Desk

அங்கு அவரிடம் “அரசு பணியின் போது மருத்துவர் ஏன் ஹிஜாப் அணிய வேண்டும்? மருத்துவருக்கு என்று சீருடை கிடையாதா? உண்மையிலேயே நீங்கள் மருத்துவர் தானா? என்னால் நம்ப முடியவில்லை. கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டிருக்கிறீர்கள்” என்றெல்லாம் பேசி அநாகரீகமான முரையில் வாக்குவாதம் செய்து தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார். சத்தம்போட்டு அவர் வாக்குவாதம் செய்ததைக் கண்டு அந்த பெண் மருத்துவர் அச்சமடைந்திருக்கிறார்.

இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இரவு நேரத்தில் பெண் மருத்துவரின் அனுமதியின்றி அவரை வீடியோ எடுத்த பாஜக நிர்வாகியின் செயலுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம் எழுந்துள்ளது. அத்துமீறி நுழைந்ததுடன், ஆடை குறித்து பேசியது, அமர்ந்திருந்த விதம் குறித்து பேசியது, ‘நீங்கள் மருத்துவரென எப்படி நம்புவது’ என்றெல்லாம் கேட்டதும் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

பெண் மருத்துவர்
பெண் மருத்துவர்PT Desk

பெண் மருத்துவருக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினர் திருப்பூண்டியில் போராட்டம் நடத்தியதையடுத்து கீழையூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மருத்துவ சங்கத்தினர் சார்பில், அந்த நிர்வாகி மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com