நாகமலை | தமிழ்நாட்டின் நான்காவது பல்லுயியிர் பாரம்பரிய தலம்., குன்றின் சிறப்புகள் என்ன ?
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே அமைந்துள்ள நாகமலை குன்றை, தமிழ்நாட்டின் நான்காவது பல்லுயிர் பாரம்பரிய தலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இக்குன்று, மலை அடிவாரக் காடு, வறண்ட இலையுதிர் காடு, முட்புதர் காடு, பாறைப் பகுதி மற்றும் நன்னீர் சுனை எனப் பல வகையான வாழ்விடங்களை ஒருசேரக் கொண்டுள்ளது. இங்குள்ள காட்டுப்பகுதியானது, 118 வகைப் பறவைகள், 138 தாவர இனங்கள் உள்ளிட்ட மொத்தம் 349 உயிரினங்கள் வாழ்வதற்கான புகலிடமாக உள்ளது. பறவைகளின் உணவுச் சங்கிலியின் உச்சியில் இருக்கும் ராசாளி கழுகு இங்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாகக் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்து வாழ்கிறது. இது இக்குன்றின் தனிச்சிறப்பாகவும் பார்க்கப்படுகிறது.
இவை மட்டுமின்றி, தனித்துவமான சூழலில் மட்டுமே வாழக்கூடிய கந்தர் தேரை மற்றும் சங்ககிரி பல்லி போன்ற பல இடவறை உயிரினங்களும் இங்கிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தனித்துவமான இந்தக் குன்றின் வாழ்விடத்தைப் பாதுகாப்பதை உறுதிசெய்யும் நோக்கில், உயிர்ப்பன்மைச் சட்டம் 2002-இன் கீழ் இந்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது, ஈரோடு மாவட்டத்தில் அறிவிக்கப்படும் இரண்டாவது பல்லுயிர் பாரம்பரிய தலம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அங்கீகாரம், நாகமலை குன்றின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லவும் உறுதுணையாக இருக்கும் என்கின்றனர் வன உயிரின ஆர்வலர்கள்...