நாகை: நாகூர் தர்காவின் 464-ஆம் ஆண்டு கந்தூரிவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 464-ஆம் ஆண்டு கந்தூரிவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான மக்கள் பங்கேற்றனர். 5 மினாராக்களிலும் ஏற்றப்பட்ட கொடியை கண்டு வழிபாட்டாளர்கள் பரவசமடைந்தனர்.
உலக பிரசித்தி பெற்ற இஸ்லாமிய வழிபாட்டு தலமான நாகூர் தர்காவின் 464-ஆம் ஆண்டு கந்தூரிவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. கந்தூரி விழாவின் கொடியேற்றத்திற்காக வருடந்தோறும் பயன்படுத்தப்படும் சிறப்புக்கொடி சிங்கப்பூரிலிருந்து நாகைக்கு கொண்டுவரப்பட்டது.
பின்னர் முதுபக்கு எனும் இந்த சிறப்புக்கொடியை எடுத்து வரும் கப்பல் வடிவரதம், செட்டிபல்லக்கு, சாம்பிராணிசட்டி போன்றவை ஊர்வலமாக நாகையிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக நாகூர் வந்தடைந்தன.
அதனைத்தொடர்ந்து கொடிக்கு துஆ ஓதப்பட்டு நாகூர் ஆண்டவர் தர்காவிலுள்ள 5 மினாராக்களிலும் கொடியேற்றப்பட்டது. அப்போது வண்ணமயமான வான வேடிக்கைகளும் நிகழ்த்தப்பட்டன. கந்தூரி விழாவின் கொடியேற்றம் நிகழ்ச்சியை காண துபாய், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் நாகூர் தர்காவிற்கு வந்திருந்தனர்.
பக்தர்களின் பாதுகாப்பு கருதி நாகூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் வரும் 23ஆம் தேதி நாகையில் இருந்து ஊர்வலமாக நாகூர் வந்தடையும். அதைத் தொடர்ந்து ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி 24ஆம் தேதி அதிகாலை நடைபெற உள்ளது.