காதலிப்பதாக கூறி ஏமாற்றி பாலியல் துன்புறுத்தல் - நாகையில் கார் டிரைவர் கைது
கல்லூரி மாணவிகள் பலரை காதலிப்பதாக கூறி ஏமாற்றி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நாகையைச் சேர்ந்த சுந்தர் என்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்
பொள்ளாச்சியில் பெண்களை அடித்து பாலியல் வன்கொடுமை செய்து, அதனை ஆபாச வீடியோவாக பதிவு செய்து ஒரு கும்பல் மிரட்டிய சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பொதுமக்கள், மாணவர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சில கல்லூரிகள் விடுமுறையை அறிவித்துள்ளன. இது தொடர்பாக கடந்த 13ஆம் தேதி விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி காவல்துறையினர், ஏராளமான தகவல்களைத் திரட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கல்லூரி மாணவிகள் பலரை காதலிப்பதாக கூறி ஏமாற்றி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக நாகையைச் சேர்ந்த கார் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் நாகை வெளிப்பாளையம் வண்டிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரது மகன் சுந்தரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுந்தரிடம் இருந்து பல பெண்களின் ஆபாச புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக நாகை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.