புதிய தலைமுறை செய்தி எதிரொலி : பட்டாசு தொழிலாளரின் குடும்பத்துக்கு உதவிய நாம் தமிழர் கட்சி
புதிய தலைமுறை செய்தி எதிரொலியால், பசியால் தவித்த பட்டாசு தொழிலாளரின் குடும்பத்துக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உதவியுள்ளனர்.
ஊரடங்கு உத்தரவால் எண்ணற்ற சாமானியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த செய்திகள் புதிய தலைமுறையில் ஒளிபரப்பாகின. அதில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பட்டாசு தொழிலாளர்களின் பரிதாப நிலை குறித்த செய்தியும் ஒளிபரப்பப்பட்டது. அப்போது பசிக்கு உணவின்றி தவிப்பதாக பட்டாசு தொழிலாளியும் அவரது மகளும் கண்ணீருடன் தங்கள் நிலையை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதைத்தொடர்ந்து இந்த செய்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்கு சென்றதையடுத்து அவர் பட்டாசு தொழிலாளர்களுக்கு தேவையான உதவி செய்யப்படும் என பதிலளித்தார்.
இந்நிலையில், புதிய தலைமுறை செய்தி எதிரொலியால் உதவி கேட்டு அழுத குழந்தையின் வீட்டுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி நாம் தமிழர் கட்சி உதவியுள்ளது.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “விருதுநகரில் ஊரடங்கு உத்தரவால் வருவாய் இல்லாமல் உணவின்றி தவிக்கும் பட்டாசு தொழிலாளியின் குழந்தை பாண்டீஸ்வரி உதவிகேட்டு அழும் செய்தி புதிய தலைமுறையில் வெளியானது. உடனடியாக சிவகாசி தொகுதி நாம் தமிழர் உறவுகள் அக்குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.