‘நாங்க பேசலாம்.. நீங்க பேசலாமா? உங்ககிட்டத்தானே அந்த துறையே இருக்கு..’ -அண்ணாமலைக்கு சீமான் கேள்வி

“திமுகவினரின் சொத்துப் பட்டியல், ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டதை வரவேற்கிறேன். ஆனால் உங்களிடம் தான் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை உள்ளது” - சீமான்
சீமான், நாம் தமிழர் கட்சி
சீமான், நாம் தமிழர் கட்சிPT

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி. எஸ். ஆர். திரையரங்கில் ‘யாத்திசை’ திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்டக் காட்சியினை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பார்த்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “ ‘யாத்திசை’ படம் மிக பிரம்மாண்டமாக உள்ளது. இந்தப் படம் வரலாற்று படம் கிடையாது. கற்பனையான வரலாற்று சாயல் படம். படத்தில், சங்க இலக்கிய தமிழ் பேசப்படுகிறது. ஆனால் அது படத்தின் ஓட்டத்துக்கு தடையாக இருக்காது. இந்தப் படம் வெற்றி பெறும்.

சீமான், நாம் தமிழர் கட்சி
Yaathisai | தமிழின் முக்கியமான படைப்பு இந்த 'யாத்திசை' - திரைப்பார்வை

12 மணி நேர வேலை சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது. அதனை கடுமையாக எதிர்ப்பேன். வேளாண்மையை அழிக்க வேளாண் சட்டத்தை பாஜக அரசு கொண்டு வந்தது. வளத்தை அழிக்க வனப் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்தது. அதேபோல்தான் தொழிலாளர் நலச் சட்டம். 8 மணி நேர உழைப்பே அதிகபட்சம்‌. 12 மணி நேரம் உழைக்க சொல்வதா? இது தொழிலாளர் நலச் சட்டம் இல்லை. தொழிலாளர் நாச சட்டம்.

மற்ற மாநிலங்களில் இல்லாதபோது முதன் முதலில் தமிழ்நாட்டில் ஏன் இந்த சட்டம் கொண்டு வர வேண்டும்? இதனை கேட்டால், நாங்கள் பாஜகவை எதிர்க்கிறோம் என்பார்கள். பாஜகவின் கிளைக் கழகமாக (திமுக) இயங்குகிறது. பாஜக கொண்டுவந்த புதிய கல்வி கொள்கையை வேறு வடிவத்தில் தமிழ்நாட்டில் கொண்டு வந்துள்ளனர். இல்லம் தேடி கல்வி அப்படி தான் உள்ளது. தொழிலாளருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், அதனை நிறைவேற்ற விடமாட்டேன். கடுமையாக எதிர்ப்போம்” என்றார்.

தொடர்ந்து அவரிடம், சபரிசன், உதயநிதி பணம் சேர்த்து வைத்துள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், “பழனிவேல் தியாகராஜன் அவரது தொகுதியில் பணம் கொடுக்காமல் வெற்றி பெற்றவர். தொகுதி மக்களிடம் மனுக்களை பெற்று நடவடிக்கை எடுப்பவர். அவர் சொல்லாவிட்டால் இவர்கள் பணம் சேர்த்துள்ளது யாருக்கும் தெரியாதா? அந்தக் கட்சியில் இருப்பவர்களில் அவர் ஒருவர் தான் உருப்படி. அவரை தூக்கிவிடுவார்கள் என்று நினைக்கிறேன். அதுதான் வருத்தமாக உள்ளது.

திமுகவினரின் சொத்துப் பட்டியல், ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டதை வரவேற்கிறேன். ஆனால் உங்களிடம் தான் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை உள்ளது. ஆகவே நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோன்று கடந்த முறை ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. குறித்தும், கூட்டணி கட்சிகள் குறித்தும் சொத்து பட்டியல், ஊழல் பட்டியலை வெளியிட வேண்டும்.

மகாராஷ்டிராவில் சிவசேனா எம்.எல்.ஏ. 40 பேரை தூக்க ஒவ்வொருவருக்கும் ரூ.150 கோடி கொடுக்கப்பட்டது. அதுலாம் ஊழல் இல்லையா? அதையெல்லாம் வெளியிட மாட்றீங்க. அதனை மறந்து விடுகிறீர்கள். ரஃபேல் விமான ஊழல் விவகாரத்தில் ராணுவ அமைச்சகத்தில் இருந்த கோப்புகளை காணவில்லை என்று கூறியவர்கள் நீங்கள்.

திமுகவில் இருப்பவர்கள் குறித்து வெளியிடுகிறீர்கள்‌. அப்படி என்றால் அதிமுகவில் இருப்பவர்கள் புனிதர்களா? நடுநிலையாக இருங்கள். இரண்டு பக்கமும் வெளியிடுங்கள்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com