பிரச்சாரத்தின் போது மயங்கி விழுந்த மன்சூர் அலிகான் - தீவிர சிகிச்சை
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான் பிரச்சாரத்தில் மயங்கி விழுந்து நிலக்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதி.
தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடிகர் மன்சூர் அலிகான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இவர் தேர்தல் அறிவிக்கும் ஒரு மாதத்திற்கு முன்பாகவே, திண்டுக்கல் பகுதியில் தேர்தல் பணிகளை ஆரம்பித்து விட்டார்.
மற்ற அரசியல்வாதிகள் போல் இல்லாமல் வித்தியாசமான முறையில் பொது மக்களை அணுகி வருகிறார். அவர் செல்லும் பகுதியில் பொது மக்களை கவரும் விதமாக, பூ மார்க்கெட் என்றால் பூக்கள் விற்பது, பூக்கள் சேகரிப்பது போன்று சாமனியராக பிரச்சாரம் செய்தார். அதேபோல் டீக்கடை, ஹோட்டல் மற்றும் இளநீர் கடை சென்றால் இளநீர் விற்பது, இதற்கெல்லாம் மேலாக காலணிகளுக்கு பாலிஷ் போடுவது என நூதன முறையில் பரப்புரையில் ஈடுபட்டு வந்தார்.
இதனால் பொதுமக்களிடம் அதிக கவனத்தை பெற்றிருந்தார். இந்நிலையில் இன்று காலை முதல் நிலக்கோட்டை தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த மன்சூர் அலிகான், மாலையில் அழகம்பட்டி, சர்க்கரை நாயக்கனூர், காமலாபுரம் போன்ற பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
மன்சூர் அலிகானுடன் இருந்த கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அவரை உடனடியாக நிலக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அவரை அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அதிக ரத்தக்கொதிப்பு காரணமாக அவர் மயங்கி விழுந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இன்னும் சற்று நேரத்தில் மருத்துவமனை இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.