சீமான்-விஜய்
சீமான்-விஜய்PT Desk

‘படத்தில் நடிப்பது மட்டுமே தலைவனாக இருப்பதற்கு தகுதி வந்து விடுவதாக நினைப்பது அவமானகரமானது’ - சீமான்

திரைப்படத்தில் நடிப்பது மட்டுமே ஒரு நாட்டை ஆள்வதற்கு, ஒரு இனத்தை வழி நடத்துவதற்கு தலைவனாக இருந்து தகுதி வந்து விடுகிறது என்று நினைப்பது அவமானகரமானது என்று சீமான் காட்டமாக தெரிவித்துள்ளார்.
Published on

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில், நாம் தமிழர் கட்சியின் கோவில்பட்டி-விளாத்திகுளம்-ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட மூன்று சட்டமன்ற தொகுதிகளின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், எட்டயபுரம் பாரதியார் மணி மண்டபத்தில் உள்ள மகாகவி பாரதியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து மண்டபத்துக்கு வந்த சீமான் முன்னிலையில் பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள், அக்கட்சிகளில் இருந்து விலகி நாம் தமிழர் கட்சியில் இணைந்து கொண்டனர்.

சீமான்
சீமான்PT Desk

”பல ஆயிரம் அரசு பள்ளிகள் மூடப்படும் நிலை உள்ளது”

இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில் “ஒரு நாட்டில் நீர் வளம், நிலவளத்தை தாண்டி அறிவு வளம் முக்கியம், ‘ஒரு நாட்டின் எதிர்காலமே வகுப்பறையில் தான் இருக்கிறது’ என்று கூறுகின்றனர். ஆனால் இன்றைக்கு வகுப்பறை வர்த்தக அறையாக மாறிவிட்டது. யார் அதிகம் பணம் கொடுக்கிறார்களோ, அவர்கள் நல்ல கல்வியை கற்றுக் கொள்ளலாம் என்ற நிலை உள்ளது. பல ஆயிரம் அரசு பள்ளிகள் மூடப்படும் நிலை உள்ளது. காரணம் மாணவர்கள் வரவில்லை. ஏன் வரவில்லை, பள்ளிகள் தரம் இல்லை.

செந்தில் பாலாஜியை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் வைத்து மருத்துவம் பார்க்க முடியவில்லை ஏன்? தரமாக இல்லை. மற்ற நாடுகளில் கல்வி, குடிநீர், மின் விநியோகம் என்று அரசு நடத்தும் அனைத்தும் தரமாக உள்ளது ஏன்?. என் நாட்டில் கேவலமாக, தரமற்று இருக்கிறது” என்று கேள்வி எழுப்பினார்.

”விவசாயம் செய்ய ஆட்கள் இல்லை”

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் சாலை சரியாக உள்ளதா? விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போட்டால் போதாது; விவசாயம் செய்ய ஆட்கள் இல்லை, 100 நாள் வேலை திட்டத்தை எப்படி பயன்படுத்துவது என்று இங்கு தெரியவில்லை

கடலில் சிலை வைக்க, டாஸ்மாக் மது பாட்டில்களை பாதுகாக்க கொடுக்கும் முக்கியத்துவத்தை, உயிர் பாதுகாக்கும் விவசாய பொருட்களை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் அரசு மேற்கொள்ளவில்லை.

சினிமா டிக்கெட் விலை என்ன?, விவசாய பொருட்களின் விலை என்ன?, ஊழல், லஞ்சம் பற்றி பேச பாஜக, காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கு பேச அருகதை இல்லை.

manipur
manipurani twitter page

மணிப்பூர் கலவரம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. மணிப்பூர் போல போல தமிழகத்தில் கலவரத்தை உருவாக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது.

”தாமிரத்தை பற்றி பேசுபவர்கள், தண்ணீரைப் பற்றி பேசுவார்களா?”

விஷத்தை கொடுத்து ஒரு குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க முடியும் என்று நம்பவில்லை. ஸ்டெர்லைட் வேண்டாம், வேறு மாநிலத்திற்கு கொண்டு செல்லட்டும், தாமிரத்தை பற்றி பேசுபவர்கள், தண்ணீரைப் பற்றி பேசுவார்களா?. அங்கு வேலை பார்ப்பவர்கள், அந்த ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி குடியிருப்பார்களா?.

”அரசியல் எண்ணத்தால் விஜய் வெளிப்படையாக செய்கிறார்”

அரசியலுக்கு வர நடிகர் விஜய் விரும்புகிறார்.‌ நடிகர் சூர்யா அகரம் பவுண்டேஷன் மூலமாக பல ஆண்டுகளாக மறைமுகமாக உதவிகள் செய்து வருகிறார். ஆனால் நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர விரும்புவதால் அதை வெளிப்படையாக செய்து வருகிறார்.

”வாக்குக்கு பணம் வேண்டாம் என்ற கருத்தை வரவேற்கலாம்”

படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்துவதை வரவேற்கலாம், பாராட்டலாம். வாக்கு செலுத்துவதற்கு பணம் கொடுக்கவும் வாங்கவும் கூடாது என்ற எனது கருத்திற்கு வலு சேர்க்கும் வகையில் தம்பி விஜய் பேசியுள்ளார். அது வரவேற்க வேண்டிய விஷயம். வாக்குக்கு பணம் கொடுக்கும் போது மக்களுக்கான சேவை ஒழிந்து விடும். நேர்மையான அரசியல், ஆட்சி அமையாது.

”நல்லது செய்வதை தட்டிக் கொடுக்கலாம், தள்ளி விடக்கூடாது”

இவ்வளவு நாள் ஏன் வரவில்லை என்று யாரையும் கேட்க கூடாது, இந்த தருணத்தில் வர தம்பி விஜய் விரும்புகிறார். என்னுடைய கொள்கை வேறு, சமரசம் செய்து கொள்ளும் எண்ணம் என்னிடம் இல்லை. தம்பி விஜய் அரசியலுக்கு வருவதை வாழ்த்துவோம், என்னுடைய பாதை வேறு, அவருடைய பாதை வேறு. தம்பி விஜய் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். நல்லது செய்வதை தட்டிக் கொடுக்கலாம், தள்ளி விடக்கூடாது.

நல்லக்கண்ணு-சீமான்
நல்லக்கண்ணு-சீமான்

”திரைப்படத்தில் நடிப்பது மட்டுமே தலைவனாவதற்கான தகுதியா?”

இன்றைக்குள்ள அரசியல் தலைவர்களில் மூத்த தலைவர் நல்லக்கண்ணு சிறந்தவர். அவரை ஒரு வார்டு கவுன்சிலராக கூட நம்மால் ஆக்க முடியவில்லை என்பது தலைகுனிவான விஷயம். திரைப்படத்தில் நடிப்பது மட்டுமே ஒரு நாட்டை ஆள்வதற்கு, ஒரு இனத்தை வழி நடத்துவதற்கு தலைவனாக இருந்து தகுதி வந்து விடுகிறது என்று நினைப்பது அவமானகரமானது. இது மாறாது. எல்லோரும் சேர்ந்து தான் மாற்ற வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com