கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப் பதியில் சுவாமி தரிசனம் செய்த பின்பு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, “பாஜக கையில் தான் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை உள்ளது. அவர்கள் சொல்வதை தான் அந்த துறை கேட்கும். தலைமைச் செயலகத்தில் சோதனை என்பது ஆளுமையை பொறுத்து இருக்கிறது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கலைஞர் ஆகியோர் உயிரோடு இருந்தபோது இது மாதிரியான சோதனை எல்லாம் நடைபெற்றது கிடையாது. அவர்கள் இருந்தபோது ஆளுநர்கள் ஆட்டம் போடவில்லை. சோதனையை வைத்து எல்லாம் தி.மு.க.வை தங்களது கூட்டணிக்குள் பா.ஜ.க. இழுக்காது. அது ஏற்கனவே அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளது. தி.மு.க.வை பழிவாங்க வேண்டும் என்று பா.ஜ.க. நினைக்கிறது.
தமிழர் பிரதமராக வேண்டும் என்று அமித்ஷா கூறுவது, வாக்குகளை பறிக்கும் நுட்பம். எப்போதும் அதை பா.ஜ.க. செய்வது வழக்கம். அவர் சொல்வது போல் தமிழர் பிரதமராவது எப்போது?, வரும் 2024 இல் பிரதமர் வேட்பாளராக தமிழரை அறிவித்தால் நாங்கள் ஆதரிக்கிறோம். அமித் ஷாவிற்கு அந்த துணிவு இருக்கிறதா?.
வரும் 2024 தமிழக வேட்பாளர் அண்ணாமலையா? தமிழிசையா? பொன் ராதாகிருஷ்ணனா? யார்?. சும்மா வாயிலேயே வடை சுட்டு, பாயாசம் காய்ச்சி இன்னும் எத்தனை காலம் எங்களை ஏமாற்றுவார்கள். அமைச்சர் செந்தில் பாலாஜி எனக்கு தம்பி போன்றவர். எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் நெருக்கமானவர். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று அறிகிறேன். விரைவில் அவர் குணமாகி வர வேண்டும் என வாழ்த்துகிறேன்.
அதிகாரத்திற்கு வரும்போது மாற்றி மாற்றி பழி வாங்குவது சகஜம். ஓராண்டிற்கு மேல் நான் சிறையில் இருந்திருக்கிறேன். பேசினாலே, டிவிட்டர் பதிவு போட்டதற்கே குண்டாசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுவே திமுகவிற்கு பாதிப்பு வரும்போது இது ஜனநாயகமா? விதிமுறை மீறல் எனக் கூறுகிறது” என்று கூறியுள்ளார்.