தொட்டாலே உதிரும் கட்டடம்: முந்தைய ஆட்சியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுங்கள் - சீமான்

தொட்டாலே உதிரும் கட்டடம்: முந்தைய ஆட்சியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுங்கள் - சீமான்

தொட்டாலே உதிரும் கட்டடம்: முந்தைய ஆட்சியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுங்கள் - சீமான்
Published on
அடுக்கு மாடிக்கட்டடத்தைத் தரமற்றதாகக் கட்டி மக்கள் உயிரோடு விளையாடும் கொடுஞ்செயலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீதும், முந்தைய ஆட்சியாளர்கள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ''சென்னை மாநகரப் பூர்வக்குடிகளுக்கு மாற்றுக்குடியிருப்பாக புளியந்தோப்புப்பகுதியில் வழங்கப்பட்ட கே.பி.பார்க் அடுக்ககத்தின் கட்டுமானம் மிக மோசமான நிலையிலிருக்கும் செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். அக்கட்டிடம் மிகப்பலவீனமாக இருப்பதும், கான்கிரீட் காரைகள் தொட்டாலே உதிர்ந்து விழுவதுமான காட்சிகள் ஆளும் அரசுகளின் நிர்வாகச்சீர்கேட்டினை அப்பட்டமாக வெளிக்காட்டுகின்றன.
ஒரு வீட்டிற்கு 15 இலட்சம் வீதமென செலவினத்தை மதிப்பிட்டுவிட்டு, தரமற்ற வீட்டைக்கட்டி முறைகேடு செய்திட்ட முந்தைய அதிமுக அரசின் மோசடித்தனத்தையும், கட்டிடத்தின் தரத்தைக்கூட பரிசோதிக்காமல் மக்களை அவசரக் கதியில் குடியேற்றிய திமுக அரசின் அலட்சியப்போக்கையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். குடிசையில் இருந்தாலாவது எங்கள் மக்கள் உயிரோடு இருப்பார்கள். அடுக்குமாடி குடியிருப்பு என்று அழைத்துச்சென்று, அதுவும் இல்லாமல் செய்துவிடாதீர்கள் பெருமக்களே! 2016 ஆம் ஆண்டு நடந்த முகலிவாக்கம் அடுக்குமாடி குடியிருப்பு விபத்தும், அதனால் நிகழ்ந்த உயிரிழப்புகளும் நமக்கு பெரும் படிப்பினையாக இருக்கிறது. மீண்டும் அதுபோல ஒரு கோரவிபத்து நிகழ்ந்துவிடக்கூடாது.
ஆகவே, உடனடியாக மக்களை அங்கிருந்து வெளியேற்றி அவர்களுக்குப் பாதுகாப்பான வாழ்விடத்தை உறுதி செய்ய வேண்டுமெனவும், அடுக்ககத்தைத் தரமற்றதாகக் கட்டி மக்கள் உயிரோடு விளையாடும் கொடுஞ்செயலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீதும், முந்தைய ஆட்சியாளர்கள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.''
இவ்வாறு சீமான் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com