பெட்ரோல் ஊற்றி ஆட்டோவை எரித்த வாலிபர்கள்... சிசிடிவி காட்சி
சென்னை ஆவடியில் முன் விரோதம் காரணமாக இரண்டு வாலிபர்கள் பெட்ரோல் ஊற்றி ஆட்டோவை எரிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
சென்னை ஆவடி தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் தமீம் அன்சாரி(25). இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் இவரது நண்பரான ஆட்டோ ஓட்டுநர் இம்ரான்கான் (22) என்பவருக்கும் நேற்று இரவு மது அருந்தும்போது வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தமீம் அன்சாரி வீட்டின் அருகே அவரது ஆட்டோவை நிறுத்தி வைத்துவிட்டு தூங்கச் சென்றுள்ளார். பின்னர் அவரது ஆட்டோ நள்ளிரவில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனை அடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்த தமிம் அன்சாரி ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அங்கிருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தனர்.
அதில் இம்ரான்கான் மற்றும் அவரது நண்பர் ராஜேஷ் ஆகியோர் நள்ளிரவில் சம்பவ இடத்திற்கு ஆட்டோவில் வந்து பெட்ரோல் ஊற்றி ஆட்டோவை எரித்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் இருவரையும் பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.