வானதி சீனிவாசனின் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர் உயிரிழந்தது எப்படி? வெளியான வீடியோ காட்சிகள்!

கோவையில் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் நுழைந்த நபர், சிறிது நேரத்திலேயே அரசு பேருந்து மீது மோதி காயமடையும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
CCTV Footage
CCTV FootagePT Desk

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் இந்த அலுவலகத்தை பயன்படுத்தி வருகிறார். நேற்று மாலை 5.47 மணிக்கு இந்த அலுவலகத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், அறையை உட்புறமாக பூட்ட முயன்றதாகத் தெரிகிறது. அப்பொழுது அலுவலகத்தில் இருந்த வானதி சீனிவாசனின் உதவியாளர் விஜயன் என்பவர், மர்ம நபரை வெளியேற்றி, வாசலில் வைத்து அவரை தள்ளிவிட்டார். மர்மநபர் சாலையில் விழுந்து, பின்னர் எழுந்து நடந்து சென்றார்.

மர்மநபர் கீழே விழுந்து கிடக்கும் சிசிடிவி காட்சிகள
மர்மநபர் கீழே விழுந்து கிடக்கும் சிசிடிவி காட்சிகளPT Desk

இந்நிலையில், அந்த நபர் அண்ணா சிலை அருகே ஜி.டி. மியூசியம் அருகில் உயிரிழந்து கிடப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அவினாசி சாலையில் மர்ம நபர் இறந்து கிடந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வுக்கு உட்படுத்தினர். அப்போது எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அலுவலகத்தில் இருந்து வெளியேற்றபட்ட சில நிமிடங்களில் மாலை 6.09 மணியளவில் மர்ம நபர் அவிநாசி சாலையை கடக்க முற்படுவதும், ஜி.டி.மியூசியம் அருகே சாலையைக் கடக்கும் பொழுது, அந்த வழியாக வந்த அரசு பேருந்தை நோக்கி செல்வதும், அந்த பேருந்தில் சிக்கி அடிபட்டு காயம் அடைந்து நடுரோட்டில் கிடப்பதுமான காட்சிகள் இருப்பது தெரியவந்தது.

சாலையில் கிடந்த மர்மநபரை மீட்ட பொதுமக்கள், அவரை சாலை ஓரத்தில் தூக்கி படுக்க வைக்கும் காட்சிகளும் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இந்த காட்சிகள் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்ம நபர் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் அரசு பேருந்தில் விழுந்தாரா? அல்லது போதையில் பேருந்து முன்பு விழுந்தாரா? அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மர்ம நபர் உயிரிழந்த விவகாரம் பல சந்தேகங்களை ஏற்படுத்திய நிலையில் தற்போது அரசு பேருந்து மீது மோதி அவர் உயிரிழந்திருப்பது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது.

வானதி சீனிவாசன் கொடுத்த விளக்கம்

இந்த விவகாரம் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து வானதி சீனிவாசன் விளக்கம் அளித்தார். அப்போது, “சம்பவம் நடந்த அந்த நேரத்தில், கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க அவர் இயக்கும் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் இப்படி ஒரு நபர் அலுவலகத்திற்கு வந்ததாக தனது உதவியாளர் விஜய் தொலைபேசி வாயிலாக தெரிவித்ததார். பின்னர் இது தொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளிக்க தான் அறிவுறுத்தினேன்.

வந்த நபர் யார்? அவர் என்ன நோக்கத்துடன் வந்தார்? அவரது பின்னணி என்ன? உள்ளிட்டவரை குறித்து காவல்துறையினர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com