“வாரிசு அரசியலை விரும்பாதவர் என் அப்பா” - மனம் திறந்த தமிழிசை செளந்தரராஜன் !
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ‘அவரும் நானும்’ என்ற புத்தம் புதிய நேர்க்காணல் நிகழ்ச்சியை நிர்வாக ஆசிரியர் ச.கார்த்திகைச்செல்வன் தொகுத்து வழங்கினார். அதில் சிறப்பு விருந்தினர்களாக பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜனும், டாக்டர்செளந்தரராஜனும் கலந்து கொண்டு தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
தமிழிசை கண்ணீர் மல்க பகிர்ந்த கொண்ட சில நினைவலைகள்:
தமிழிசை குமரி ஆனந்தனாக இருந்தனாக இருந்த நான், திருமணத்திற்கு பின் தமிழிசை செளந்தரராஜனாக மாறினேன். பெயரில் மட்டும் பாதியல்ல என் உயிரிலும் பாதியாக இருப்பவர் டாக்டர். செளந்தரராஜன். ஏனென்றால் நான் மாணவியாக ஆரம்பித்து பெரிய தலைவியாக தொடர்கிறேன் என்றால் அதற்கு முழு முழு காரணம் டாக்டர். செளந்தரராஜன் தான்.
என்னுடைய திருமணம் அக்.31 ஆம் தேதி காலை 06.30 மணிக்கு, கலைவாணர் அரங்கில் பெரிய மாநாடு போல அமைந்தது. ஒரே மேடையில் மூன்று முதலமைச்சர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. எம்.ஜி.ஆர் பக்கத்தில் கலைஞர் வந்து அமர்ந்தபோது,அரங்கம் முழுவதும் கரவொலிகளால் நிறைந்தது. திருமணத்தின் போது எம்.ஜி.ஆர் பேசியதும், அவர் தாலி எடுத்து கொடுத்ததும் தான் ஆச்சரியமாகவும், பிடித்ததாகவும் எனக்கு இருந்தது.
அரசியல் ஆர்வம் சிறு வயதிலிருந்தே எனக்கு உண்டு, குறிப்பாக 6ஆம் வகுப்பு படிக்கும்போதே அப்பா போன்று அரசியல்வாதியாகஆவேன் என்று சொன்னேன். என் அம்மாவினுடைய ஆசையின்படி மருத்துவர் ஆனேன். தேசிய கட்சியில் காங்கிரஸூக்கு மாற்றாக பாஜகவில் வாஜ்பாயின் மீது ஒரு ஈர்ப்பும், தேசியத்தின் மீது ஒரு ஈர்ப்பு வந்தது. பாஜகவில் இணைந்ததும் எதுக்கு இந்த அதிக பிரசங்கித்தனம் என்று கோபப்பட்டார், ஆறு மாதங்கள் வரை என்னிடம் பேசவேயில்லை என் அப்பா.
எல்லா பெண்களைப் போல இல்லாமல் என்னுடைய அப்பா மீது நான் அதிக ஈடுபாடு உள்ளவள். நிறைய சவால்களை மகிழ்ச்சியாக கடந்தது போல அரசியலையும் ஏற்றுக்கொண்டேன். அப்பாவோடு பாதயாத்திரை போனது, அப்பாவுக்காக வாக்கு சேகரித்தது, அப்பா மீது ரொம்ப ஈடுபாடுள்ள பெண்ணாக இருந்தேன். அப்பா பேசாதது ஒரு பெரிய பிளவு, தாங்க முடியாத காயம் தான்.
1996ல் யசோதா என்னை பார்த்துவிட்டு பாப்பாவை அரசியலுக்கு கூட்டிட்டி வந்துடுங்கன்னு சொன்னபோது என்னுடைய அப்பா பயங்கரமாக கோபப்பட்டார். நான் இருக்குற வரைக்கும் அது நடக்காதுன்னு சொன்னவர். எனக்கு வாரிசு அரசியல் பிடிக்காது, அதுவும் என்னுடைய வாரிசை கொண்டு வரமாட்டேன் என்று அப்போதே உறுதியாக கூறியவர், அப்பா. ஆனால் எனக்கு அரசியல் மீது ஒரு கனல்இருந்தது.
சமையலும், இந்தியையும் சுட்டுபோட்டாலும் கற்றுக்கொள்ள முடியவில்லை. என் குடும்பம் எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கின்றனர். ஹைக்கூ கவிதை எழுதுவதும், புத்தகம் படிப்பதும் எனக்கு மிகவும் பிடிக்கும். அரசியலில் முதலில் அமைச்சராகவும், பிறகு முதலமைச்சராக வேண்டும் என்பதே என் கனவு என்றும் கூறி முடித்தார், டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்.