“எனது மின்கட்டணம் 4 மடங்கு உயர்ந்துள்ளது” - சுமந்த் சி ராமன்
மார்ச் மாத கட்டணத்தை விட 4 மடங்கு தனது மின் கட்டணம் உயர்ந்திருப்பதாக அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட பின்னர் மக்கள் செலுத்த வேண்டிய மின் கட்டணத் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இதனால் கடந்த மாதங்களில் மக்கள் மின் கட்டணம் செலுத்தவில்லை. தற்போது மின்வாரியத்தால் மின்கட்டணம் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இதில் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கணக்கீடு செய்யப்படும் மின் கட்டணம் தற்போது 4 மாதங்களுக்கு சேர்த்து கணக்கீடு செய்யப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்தக் குற்றச்சாட்டை நடிகர் பிரசன்னாவும் முன்வைத்திருந்தார். அதை மறுத்திருந்த மின் வாரியம் அவருக்கு கண்டனத்தை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது மின் கட்டண ரசீதை பார்த்தேன். அது மார்ச் மாதத்தில் செலுத்திய பணத்தைவிட 4 மடங்கு அதிகமாக உள்ளது. இதற்கு முன்னர் இப்படி பார்த்ததே இல்லை. தமிழக மின்வாரியம் மீண்டும் தங்கள் கணக்கீட்டு முறையை செய்து பார்க்க வேண்டும். ஏனென்றால் பலரும் இதையே தான் தெரிவிக்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.