“எம்மதமும் சம்மதம்... இதுதான் தமிழ்நாடு...” விநாயகர் கோவில் கட்ட நிலம் கொடுத்த இஸ்லாமியர்கள்!

இஸ்லாமியர்கள் நிலம் வழங்கி கட்டப்பட்ட விநாயகர் கோயில் குடமுழுக்கு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. மதநல்லிணக்கத்தை போற்றும் இந்த உன்னத நிகழ்வு எங்கே நடந்தது என விரிவாக பார்க்கலாம்....
 படியூர் மக்கள்
படியூர் மக்கள்pt web

திருப்பூர் மாவட்டம் படியூர் அடுத்த ஓட்டப்பாளையம் ரோஸ் கார்டன் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் என அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றாக வசித்துவரும் இப்பகுதியில் விநாயகர் கோவில் கட்ட தீர்மானிக்கப்பட்டது.

அதற்கு போதுமான இடம் இல்லாத சூழ்நிலையில், அங்குள்ள முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசலுக்கு சொந்தமான ஆறு லட்சம் ரூபாய் மதிப்பிலான மூன்று சென்ட் நிலத்தை இஸ்லாமியர்கள் வழங்கினர். இதனைத் தொடர்ந்து அங்கு கோவில் கட்டும் பணி நிறைவடைந்து குடமுழுக்கு நடைபெற்றது.

பக்தர் மகுடேஸ்வரன் இதுதொடர்பாக கூறுகையில், “விநாயகர் கோவில் வேண்டுமென்று இந்துக்களாகிய நாங்கள் கேட்டபோது, உடனே அவர்கள், ‘எம்மதமும் சம்மதம்; நாம் அனைவரும் ஒருவரே’ என்று மூன்று செண்ட் இடம் வழங்கி மேலும் அன்னதானத்திற்கு பணம் வழங்கி இந்த ஆலய திருப்பணிகளைச் செய்து கும்பாபிஷேகத்தை நடத்தினோம்” என தெரிவித்தார்.

கும்பாபிஷேகத்தின்போது, பள்ளிவாசலில் இருந்து ஐந்து தட்டுகளில் சீர்வரிசைப் பொருட்களுடன் ஊர்வலமாகச் சென்ற இஸ்லாமியர்கள், அதனை கோவிலுக்கு வழங்கினர்.

இஸ்லாமியர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த அன்வர்தீன் இதுகுறித்து கூறுகையில், “கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும் அழகான ஒரு கோவிலை கட்டமைத்துள்ளார்கள். இந்த கோவில் இந்து முஸ்லீம் அடையாளமாகவும், வரும்கால சந்ததிகளின் அடையாளமாகவும் ஒற்றுமையாகவும் திகழ்கிறது. இதுதான் தமிழ்நாடு என்பதை இந்த உலகத்திற்கு பறைசாற்றுகிறது” என தெரிவித்தார்.

இந்து - இஸ்லாமியர்கள் என்கிற பேதமின்றி, இதேபோல் சகோதரத்துவத்துடனும் ஒற்றுமை உணர்வுடனும் இருப்போம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். தமிழ்நாட்டின் மதநல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக இந்த நிகழ்வு அமைந்திருக்கிறது என்றால் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com