தேவாவுக்கு ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் கௌரவம்.. சபாநாயகர் இருக்கையில் அமரவைத்து மரியாதை!
இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவாவுக்கு ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
பிரபல இசையமைப்பாளர் தேவா அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு மேற்கொண்ட பயணத்தின்போது, அவருக்கு ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் (Australian Parliament) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மரியாதை வழங்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் கிடைத்த மரியாதை..
திரையுலக இசையில் தேனிசைத்தென்றல் தேவாவிற்கு என்று தனி இடம் இருக்கிறது. 36 ஆண்டுகால இசை வாழ்க்கையில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் 400 படங்களுக்கும் மேல் இசையமைத்த பெருமைக்கு சொந்தக்காரர் தேவா. ஒரு படத்தில் மெலடி, குத்துபாட்டு, வெஸ்டர்ன் பாட்டு, இசைக்கருவிகளுக்கு முக்கியத்துவம் தரும் பாட்டு முதலியவற்றோடு, கானா பாடல்களையும் கொடுக்கும் ஒரே இசையமைப்பாளர் தேவா மட்டுமே. இசையமைப்பதை தாண்டி பல்வேறு ஹிட் பாடல்களையும் பாடியுள்ளதோடு, மாஸ்ஸான பின்னணி இசை என ரசிகர்களின் மனதில் தேவா தனியிடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு சென்ற தேனிசைத்தென்றல் தேவா, சபாநாயகர் நாற்காலியில் அமரவைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். தேவா அவர்கள் பாராளுமன்றத்துக்கு வரவேற்கப்பட்டு, அங்குள்ள சபாநாயகர் இருக்கையில் அமர அழைக்கப்பட்டார். மேலும், பாராளுமன்றத்தின் முக்கியச் சின்னமான செங்கோலும் அவருக்கு அளித்து மரியாதை செலுத்தப்பட்டது. இது ஒரு பெரிய அரசியல் கௌரவமாகக் கருதப்படுகிறது.
இந்த அரிய மரியாதை குறித்து தேவா அவர்கள் நெகிழ்ச்சியுடன் தனது நன்றியைத் தெரிவித்தார். ஆஸ்திரேலிய அரசு, தமிழ்க் கலை மற்றும் கலாச்சார மையம் சக இசைக் கலைஞர்கள் மற்றும் தனது அன்பான ரசிகர்கள் அனைவருக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றியை வெளிப்படுத்தினார்.தேனிசைத் தென்றல் தேவாவுக்குக் கிடைத்த இந்த கௌரவம், தமிழ் இசைத்துறைக்குப் பெருமை சேர்த்துள்ளது.