மதுரையில் 1500 சவரன் நகைக்கொள்ளையில் முருகனுக்கு தொடர்பு? போலீசார் விசாரணை
மதுரையில் கடந்த பிப்ரவரி மாதம் அடகு கடையில் 1500 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டதில் முருகனுக்கு தொடர்பு இருக்கிறதா என மதுரை மாநகர காவல்துறை விசாரணை செய்து வருகிறது.
மதுரை நரிமேடு பகுதியை சேர்ந்த கோபிநாத் என்பவருக்கு சொந்தமான அடகு கடையில் கடந்த பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி நள்ளிரவில் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் உள்ளே இருந்த சுமார் 1492 பவுன் நகையையும் 9 லட்சம் ரூபாயையும் திருடிச் சென்றனர்.
இதுகுறித்த காட்சிகள் கடைக்கு அருகே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த 8 மாதங்களாக இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் போலீசார் திணறி வந்தனர்.
இந்த நிலையில் திருச்சி லலிதா ஜுவல்லரியில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைந்த முருகனுக்கு மதுரை கொள்ளையில் தொடர்பு இருக்க வாய்ப்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக மதுரை போலீசார் திருச்சி காவல்துறையுடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து மதுரை மாநகர காவல் குற்றப்பிரிவு துணை ஆணையர் செந்தில்குமார் கூறும்போது மதுரை கொள்ளை வழக்கில் முருகன் கும்பலுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் முருகனின் கூட்டாளி சுரேஷிடம் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்
.