''சூழ்ச்சி செய்யும் தேசியக் கட்சிகள்'' - அதிமுக கூட்டத்தில் அதிரடிகாட்டிய முனுசாமி!

''சூழ்ச்சி செய்யும் தேசியக் கட்சிகள்'' - அதிமுக கூட்டத்தில் அதிரடிகாட்டிய முனுசாமி!
''சூழ்ச்சி செய்யும் தேசியக் கட்சிகள்'' - அதிமுக கூட்டத்தில் அதிரடிகாட்டிய முனுசாமி!

அதிமுக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அதிமுக கூட்டணி குறித்தும், தேசியக் கட்சிகள் குறித்தும் அதிரடியாக பேசினார்.

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அதிமுக தேர்தல் பரப்புரை பணிகளை தொடங்கி வைக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் அதிமுக நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அதிமுக கூட்டணி குறித்தும், தேசியக் கட்சிகள் குறித்தும் அதிரடியாக பேசினார். அதில், “அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. அதிமுக தலைமையில்தான் கூட்டணி. எந்த தேசிய கட்சி இப்படி பேசி கூட்டணிக்கு வந்தாலும் அவர்கள் அதிமுகவுக்கு தேவையில்லை. ஜெயலலிதா, கருணாநிதி என்ற ஆளுமைகள் இல்லாத தமிழகத்தில் இடையில் புகுந்து பலன் பெறலாம் என சிலர் நினைக்கின்றனர். எந்த தேசிய கட்சிகளும் உள்ளே வரவிட முடியாமல் தமிழகத்தை காத்தது திராவிட இயக்கம். தற்போது சில சூழ்ச்சி செய்து உள்ளே வர பார்க்கின்றனர். இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்”எனத் தெரிவித்தார். தேசியக் கட்சி உடனான பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் உள்ள நிலையில் முனுசாமியின் இந்த பேச்சு தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.

முன்னதாக, அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சமீப நாட்களாக முதல்வர் வேட்பாளர் தொடர்பாக அதிமுக – பாஜக இடையே காரசாரமான கருத்து மோதல்கள் எழுந்தன. அண்மையில் அரியலூரியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், “யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பாஜக தலைமை தான் முடிவு செய்யும். முதல்வர் வேட்பாளர் அதிமுக தலைவராக இருப்பினும், அது குறித்தான அறிவிப்பை பாஜக தலைமையே அறிவிக்கும்”எனத் தெரிவித்தார். அவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு பதிலளித்த அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, “ கூட்டணிக்கு முருகன் குழப்பத்தை ஏற்படுத்துவரானால் பாஜக தலைமை முருகனை நீக்க வேண்டியிருக்கும்” என்று காட்டமாக பதில் அளித்தார்.

மேலும் அமைச்சர் கடம்பூர் ராஜூ இதுகுறித்து கூறுகையில், ''அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். அடுத்தவர்கள் சொல்வதை பற்றி நாங்கள் கவலைப்படப்போவதில்லை'' என தெரிவித்துள்ளார். இந்த காரசார கருத்து மோதல்களுக்கு இடையே கூட்டணி குறித்து பேசிய பாஜக தமிழக தலைவர் முருகன், ''பாஜவுக்கு தனிக்கொள்கை இருந்தாலும் அதிமுகவுடன் கூட்டணியில் தான் இருக்கிறது. திமுக-காங்கிரஸுக்கு தனித்தனி கொள்கை இருப்பது போல அதிமுக-பாஜகவுக்கும் தனித்தனி கொள்கை உண்டு'' என்று தெரிவித்தார்.

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/zLK60z3t3HU" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com