ஒழுங்கா ப்ளாட் அப்ரூவல் கொடு, இல்ல: பேரூராட்சி பெண் தலைவரின் ஜாதி பெயரைச் சொல்லி மிரட்டியதாக புகார்

பெரம்பலூர் அருகே பூலாம்பாடி பேரூராட்சி பட்டியலின திமுக பெண் தலைவருக்கு ப்ளாட் அப்ரூவல் கொடுக்கக் கூறி கொலை மிரட்டல் விடுத்ததோடு ஜாதியை சொல்லி திட்டியதாகவும் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தயுள்ளது.
bagyalakshmi
bagyalakshmipt desk

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூராட்சி தலைவராக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த பாக்யலட்சுமி. இந்நிலையில், கடம்பூர் கிராம தொடக்க வேளாண் கூட்டுறவு அலுவலகம் எதிரே லட்சுமி நகர் என்ற பெயரில் மனைப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு பேரூராட்சி நிர்வாகம் அனுமதி தரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மூன்று பேர் பேரூராட்சி தலைவர் பாக்ய லட்சுமியை அவரது வீட்டிற்கே சென்று ஜாதியை (பட்டியல் இனத்தை சேர்ந்தவர்) சொல்லி திட்டி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

office
officept desk

இது தொடர்பாக பாக்யலட்சுமி, அரும்பாவூர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், கடம்பூரில் தொடக்க வேளாண் கூட்டுறவு அலுவலகம் எதிரே லட்சுமிநகர் என்ற மனைப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. அரசு விதிமுறைகளை பின்பற்ற தவறிவிட்டதால் மேற்கண்ட மனைப்பிரிவிற்கு அனுமதிதரவில்லை. இந்த நிலையில் ராமதாஸ் மகன் சதீஸ்குமார், சின்னசாமி மகன் ரெங்கநாதன், தேனூர் கந்தன் மகன் கிருஷ்ணண் ஆகிய மூன்று பேர் கம்பு, கல் ஆகியவற்றுடன் எனது வீட்டிற்கு வந்து என்னை ஜாதியை சொல்லி திட்டி, தகாத வார்த்தைகளால் அசிங்கமாக பேசினர்.

ஜாதியை சொல்லி திட்டாதீர்கள் எனக் கூறிய என் கணவர் செங்குட்டுவனையும் தாக்க முயன்றனர். பூலாம்பாடியில் நாங்கள் வைத்ததுதான் சட்டம் என்றும், நாளைக்குள் மனைப்பிரிவிற்கு அனுமதி கொடுக்கவில்லை என்றால் உங்கள் இரண்டுபேரின் சாவு என்கையில் தான் என கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே ஜாதி பெயரைச் சொல்லி அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்த மூன்று பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

police station
police stationpt desk

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பழனிச்சாமியிடம் கேட்டபோது, தற்போதுதான் தனக்கு தகவல் தெரியும். புகாரில் முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க சொல்லியுள்ளதாக கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com