முல்லைப்பெரியாறு அணையை வலுக்கட்டாயமாகத் திறந்தது தமிழக இறையாண்மை மீதான தாக்குதல்: சீமான்

முல்லைப்பெரியாறு அணையை வலுக்கட்டாயமாகத் திறந்தது தமிழக இறையாண்மை மீதான தாக்குதல்: சீமான்
முல்லைப்பெரியாறு அணையை வலுக்கட்டாயமாகத் திறந்தது தமிழக இறையாண்மை மீதான தாக்குதல்: சீமான்

உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த கொள்ளளவை எட்டுவதற்கு முன்பே, அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சீமான், “முல்லைப்பெரியாறு நிலப்பகுதியை தமிழர்கள், கேரளாவிடம் இழந்தபோதும், அணைப்பாதுகாப்பு மற்றும் நிர்வாகம் இன்றளவும் தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. நீர் திறப்புப்பணிகளை தமிழகப் பொதுப்பணித்துறைதான் மேற்கொள்கிறது. ஆனால், இதுவரை இல்லாத நடைமுறையாக கேரளா மாநிலத்தின் நீர்வளத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் ஆகியோர் அத்துமீறி முல்லைப்பெரியாறு அணையை வலுக்கட்டாயமாகத் திறந்திருப்பது தமிழ்நாட்டின் இறையாண்மை மீது தொடுக்கப்பட்டத் தாக்குதலேயாகும்.

அணையின் உண்மையான முழுக்கொள்ளளவு 152 அடியாகும். உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ள கொள்ளளவு 142 அடி. ஆனால், தற்போதைய அணையின் நீர்மட்டம் 139 அடியைக்கூடத் தொடவில்லை எனும்போது உபரிநீர் எங்கிருந்து வந்தது? முதல்நாள் உச்சநீதிமன்றத்தில் கேரளாவின் வாதத்தை ஏற்க மறுத்து, அப்பகுதியில் மழை பெய்யவில்லை என்பதால் அணையின் நீர்மட்டத்தைக் குறைக்கத் தேவையில்லை எனும் வாதம் வைத்த தமிழ்நாடு அரசு, மறுநாள் அத்துமீறி அணையைத் திறந்த கேரள அமைச்சர்களது செயலைத் தடுத்து நிறுத்தாது வேடிக்கைப் பார்த்தது ஏற்கவே முடியாத பெருங்கொடுமையாகும்.

உச்சநீதிமன்றமே நவம்பர் 11 வரை அணையின் நீர்மட்டத்தை 139.5 அடி வரையில் சேமிக்கலாம் என உத்தரவிட்ட நிலையில், அதை எட்டும் முன்பாகவே அணையிலிருந்து நீர்திறப்பதை தமிழ்நாடு அரசு எவ்வாறு அனுமதித்தது? அணைப்பராமரிப்பு உரிமை இன்னும் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும்போது நீர்த்திறப்பின்போது தமிழகத்தின் சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர், தேனி மாவட்ட அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற , நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் தமிழ்நாடு அரசு சார்பில் பங்கேற்காதது ஏன்? கேரளா அமைச்சர்களின் அத்துமீறலை உடனடியாக உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, சட்டத்தின் துணையுடன் கேரள அரசின் வஞ்சகச் செயலை முறியடித்திருக்க வேண்டிய திமுக அரசு, அதனைச் செய்யத்தவறியது அரசின் நிர்வாகத்திறமையின்மையையும், அலட்சியப்போக்கையுமே வெளிக்காட்டுகிறது. மேலும், உச்சநீதிமன்ற வழிகாட்டல்படியே எல்லாம் நடைபெறுகிறது என அத்துமீறி அணையைத் திறந்த கேரள அமைச்சர்களின் செயலை நியாயப்படுத்தி திமுக அரசு சப்பைக்கட்டு கட்டுவது வெந்தப்புண்ணில் வேலைப்பாய்ச்சும் கொடுஞ்செயலாகும். எதிர்காலத்தில் இதனைக் காரணம் காட்டியே, அணையின் நீர் மட்டம் 136 அடியைத் தாண்டாதவாறு கேரள அரசு முட்டுக்கட்டை இடுவதற்கு வாய்ப்பளித்துள்ளதன் மூலம், பல ஆண்டுகள் போராடிப்பெற்ற உரிமையினை ஒரே இரவில் ஒட்டுமொத்தமாகத் தாரை வார்த்துள்ளது திமுக அரசு.

ஆகவே, இனியாவது திமுக அரசு விழித்துக்கொண்டு, கேரளாவின் அத்துமீறலை உடனடியாக உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுசென்று சட்டப்போராட்டம் நடத்தி, இழந்த முல்லைப்பெரியாறு உரிமையை நிலைநாட்ட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com