அணை நீர் குடிநீர் தேவைக்கே போதாது!.. விவசாயத்திற்கு வாய்ப்பே இல்லை !

அணை நீர் குடிநீர் தேவைக்கே போதாது!.. விவசாயத்திற்கு வாய்ப்பே இல்லை !
அணை நீர் குடிநீர் தேவைக்கே போதாது!.. விவசாயத்திற்கு வாய்ப்பே இல்லை !

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை முற்றிலும் ஓய்ந்து முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 114 அடியை நோக்கி குறைந்து வருவதால் தமிழகத்திற்கான நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்பு மிக மிக குறைவு என தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் நீர் ஆதாரமாக திகழும் முல்லைப்பெரியாறு அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை போதிய அளவில் பெய்யவில்லை. அதே நேரம் வடகிழக்கு பருவ மழையும் தமிழக விவசாயிகளுக்கு ஏமாற்றத்தையே தந்துள்ளது. இந்நிலையில், அதிர்ஷ்டவசமாக கிடைத்த ஒகி புயலின் மழை அணை நீர்மட்டத்தை ஒரே நாளில் ஆறு அடி உயர்த்தி 127 அடிக்கு கொண்டுபோனது. அப்போதிருந்து, இப்போது வரை, மழைப்பதிவு, நீர்வரத்து, நீர்மட்டம் ஆகியவை தொடர்ந்து இறங்கு முகத்திலேயே இருக்கின்றன.

கடந்த மூன்று நாட்களாக அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு வெறும் 8 கன அடியாக உள்ளது. நீர்மட்டம் படிப்படியாக குறைந்து 114 அடியை நோக்கி கீழிறங்கி வருகிறது. இதனால் கடந்த 5ஆம் தேதியில் இருந்து தமிழக பாசனத்திற்கான நீர் திறப்பு நிறுத்தப்பட்டு தமிழக குடிநீருக்காக விநாடிக்கு 100 கன அடி தண்ணீர் மட்டும் திறக்கப்படுகிறது.

முல்லைப் பெரியாறு அணையை பொருத்தளவில் 114 அடிக்கும் கீழ் உள்ள தண்ணீர் குடிநீர் தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படுவது வழக்கம். ஏனென்றால் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கும் அதிகமாக இருந்தாலும், அணையில் இருந்து 104 அடிக்கும் மேல் உள்ள தண்ணீரை மட்டுமே தமிழக பயன்பாட்டிற்காக எடுக்க முடியும். அணையின் நீர் தேங்கியிருக்கும் தேக்கடி ஏரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும் கால்வாய்களின் அமைப்பு அவ்வாறே அமைந்துள்ளது. அந்த வகையில் அணையில் இருந்து தமிழகத்திற்கு இனி 10 அடி தண்ணீர் மட்டுமே பயன்படுத்த முடியும். பருவ மழைகள் பொய்த்து, மார்ச் முதல்வரத்தில் இருந்து கோடை துவங்க உள்ளது. 

எனவே தென்மேற்கு பருவ மழைக்காலமான ஜூன் மாதம் வரை நான்கு மாதங்களுக்கு இந்த தண்ணீரைத்தான் தமிழகத்தின் தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்ட மக்கள் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, முல்லைப் பெரியாறு அணையில் இருந்து, இனி தமிழகத்திற்கான நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்பு மிகமிக குறைவு என தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் பகுதி விவசாயிகள், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறப்பை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

மதுரை, மேலூர் பகுதி பாசன நிலங்களுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும். வைகை அணையின் நீர்மட்டமும் 40 அடிக்கும் கீழே இறங்கி வருகிறது. வைகை அணையில் தண்ணீர் திறக்க வேண்டுமானால், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து அதிக தண்ணீர் திறக்கப்பட்டு அது வைகை அணையை சென்றடைய வேண்டிய நிலை உள்ளது. தற்போது முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள விநாடிக்கு 100 கன அடி தண்ணீர் தேனி மாவட்டத்தையே கடக்காது என அதிகாரிகள் கூறுகின்றனர்.

எனவே முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் குடிநீர், பாசனம் என்ற இருபெரும் தேவைகள் இருக்கிறது. ஆனால், குடிநீர் பயன்பாட்டிற்குத்தான் முக்கியத்துவம் அளிக்க முடியும் சூழலில் அணை நிலவரம் இருப்பதாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com