முல்லை பெரியாறு அணை நீர்பிடிப்பில் 8000 ஏக்கர் ஆக்கிரமிப்பா? அதிரவைக்கும் தகவல்!
முல்லை பெரியாறு அணையின் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய வழக்கை மார்ச் 23ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்தது.
தமிழக பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்க மாநில துணைத்தலைவர் விஜயகுமார், முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு பணிக்கு மத்திய போலீஸ் படையை நியமனம் செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அத்துடன், அணைப்பகுதியின் நீர்பிடிப்பு பகுதியான 136 முதல் 155 அடி வரையுள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற உத்தரவிட வேண்டும் மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்காக, அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் சுமார் 8000 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அவற்றை அகற்ற வேண்டும்” என வாதிட்டார். இதையடுத்து அரசு சார்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டதால், விசாரணையை மார்ச் 23ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

