தெளிவான மனநிலையில் முகிலன் இல்லை : மனைவி பூங்கொடி

தெளிவான மனநிலையில் முகிலன் இல்லை : மனைவி பூங்கொடி
தெளிவான மனநிலையில் முகிலன் இல்லை : மனைவி பூங்கொடி

கரூரை சேர்ந்த பெண் அளித்த பாலியல் புகார் பொய்யானது என முகிலனின் மனைவி பூங்கொடி தெரிவித்துள்ளார். 

கரூரைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த பிப்ரவரி மாதம் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முகிலன் மீது புகார் கொடுத்தார். அவர் தன்னை வலுக்கட்டாயப்படுத்தி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும் அந்த பெண் புகார் கொடுத்திருந்தார். 

இந்த புகார் தொடர்பாக முகிலன் மீது ஏமாற்றுதல், பாலியல் பலாத்காரம், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் பிப்ரவரி மாதமே முகிலன் எழும்பூர் நிலையத்தில் இருந்து காணாமல் போனார். இது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. 

இதைத்தொடர்ந்து கரூர் பெண் கொடுத்த பாலியல் பலாத்கார புகார் தொடர்பான வழக்கும் சிபிசிஐடிக்கு கடந்த மார்ச் மாதமே மாற்றப்பட்டது. இது தொடர்பாக கரூரில் உள்ள சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். தற்போது முகிலன் கண்டுபிடிக்கப்பட்டு எழும்பூர் சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பாலியல் வன்கொடுமை வழக்கில் முகிலனை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். 

இந்நிலையில், முகிலனை சந்தித்த பிறகு அவரது மனைவி பூங்கொடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “எனது கணவர் முகிலன் தெளிவான மனநிலையில் இல்லை. அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கும் அளவுக்கு எனது கணவரின் உடல் நிலை உள்ளது. தான் கடத்தப்பட்டதாகவும் அடைத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டதாகவும் முகிலன் கூறினார். தன்னை எங்கே அடைத்து வைத்திருந்தனர் என்பது எனது கணவர் முகிலனுக்கு தெரியவில்லை.

போராளியாக இருந்தால் எவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்க வேண்டும் என்பதற்கு என் கணவரே எடுத்துக்காட்டு. ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்பானவர்கள்தான் என் கணவரை கடத்தியுள்ளனர். அணுக்கழிவு கருத்து கேட்பு கூட்டத்தில் முகிலன் பங்கேற்க கூடாது என்பதற்கான செயலில் சிலர் ஈடுபட்டுள்ளனர். 30 நாட்கள் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும். இன்று காலை எனக்கு நடந்த விபத்து திட்டமிட்டு நடந்த விபத்து. போலீஸ் விசாரிக்க வேண்டும்.  கரூரை சேர்ந்த பெண் அளித்த பாலியல் புகார் பொய்யானது” எனத் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com